திருத்துறைப்பூண்டி, மே 8: திருத்துறைப்பூண்டி வேதை பைபாஸ் சாலை முதல் கட்டிமேடு வரை சாலை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருவதை மதுரை நெடுஞ்சாலை துறை அதிகாரி ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறையில் நடந்து வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து ஆண்டு தோறும் கண்காணிப்பு பொறி யாளர்கள் தலைமையிலான உள் தணிக்கை குழுக்களால் ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி, திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்ட கட்டுப்பாட்டின் கீழ் வரும் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட அலுவலகத்தினால் திருத்துறைப்பூண்டி வேதை பைபாஸ் சாலை முதல் கட்டிமேடு வரை சாலை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், அகலப்படுத்தப்பட்ட இந்த சாலை பணிகளை நெடுஞ்சாலைத் துறை (திட்டம்) மதுரை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையில் உள் தணிக்கை குழுவினர் நேற்று முன் தினம் ஆய்வு செய்தனர். அப்போது, சாலை பணி தளத்தை அளந்தும், அதன் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது பரமக்குடி உதவி கோட்டப் பொறியாளர் (திட்டங்கள்) வெற்றிவேல் ராஜன், உதவி பொறியாளர் தாரனி , திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் வீரப்பன், திருத்துதுறைப்பூண்டி உதவி கோட்ட பொறியாளர் பிரவினா, உதவி பொறியாளர் ரவி மற்றும் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
