முசிறி, மே 8: திருச்சி மாவட்டம் முசிறி, தும்பலம், முத்தம்பட்டி, சிட்டிலரை, தா.பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் வாட்டி வதைத்ததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியத்திற்கு மேல் முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன.
சிறிது நேரத்தில் முசிறி பகுதியில் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் கோடை மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்தது, குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருச்சி மாநகர பகுதியிலும் நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழை கோடை உழவுக்கு உகந்தது என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
