சென்னை: சென்னை கோட்டம் ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணிகளின் வசதிகளை அதிகரிக்கவும் தெற்கு ரயில்வே புதிய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சென்னை கோட்டம் முழுவதும் 20 புதிய வாகன நிறுத்துமிடங்களை தொடக்கி உள்ளதால், ரயில் நிலையங்களில் கூட நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சென்னை பிரிவில் உள்ள மொத்த வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கை 106-லிருந்து 126-ஆக அதிகரித்துள்ளது. வண்டலூர், பொத்தேரி, ஆவடி தெற்கு, ஆவடி வடக்கு, தாம்பரம் கிழக்கு, செங்கல்பட்டு, பெரம்பூர், சிங்கபெருமாள்கோவில், கடம்பத்தூர், தாம்பரம் சானடோரியம், நெமிலிச்சேரி, எண்ணூர், சூலூர்பேட்டை, அரக்கோணம், கிண்டி, பரங்கிமலை, பெரம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் புதிய வாகன நிறுத்துமிடங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலயங்களில், சுமார் 820 சதுரமீட்டர் பரப்பளவில் பலதள வாகனம் நிறுத்தும் வசதி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாகன நிறுத்துமிடங்களில் அம்ரித் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் டிஜிட்டல் அடிப்படையிலான டிக்கெட் முறை, யுபிஐ மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற நவீன வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
