கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 168 இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜ முதல் முறையாக அங்கு ஆட்சியை பிடிக்க உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. இதில் பால்டா தொகுதியில் பல்வேறு முறைகேடுகள் காரணமாக வரும் 21ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்நிலையில், 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 23 மாவட்டங்களில் 77 வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் 2.5 லட்சம் மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், காலை 9.30 மணிக்கு பிறகு ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜ முன்னிலை பெறத் தொடங்கியது. அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜவே தொடர்ந்து முன்னிலை வகித்தது. பகல் 12 மணி நிலவரப்படி, பாஜ 168 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. திரிணாமுல் காங்கிரஸ் 82 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க 148 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜ வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜ ஆட்சி அமைக்க உள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜ அலுவலகங்களில் இனிப்புகள் பரிமாறி பாஜ கட்சியினர் வெற்றியை கொண்டாடினர். பாஜ 180க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மாநில தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். அதே சமயம் வாக்கு எண்ணிக்கையில் இன்னும் 20க்கும் மேற்பட்ட சுற்றுகள் இருப்பதால் நிலைமை மாறும் என திரிணாமுல் காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
பழிதீர்த்தார் மம்தா
நட்சத்திர தொகுதியான பவானிபூரில் முதல்வர் மம்தா பானர்ஜி முதலில் பின்னடைவை சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ மாநில தலைவர் சுவேந்து அதிகாரி முன்னிலை வகித்தார். ஆனால் அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் மம்தா பெற்றார். நண்பகல் 12 மணி நிலவரப்படி மம்தா 25,942 வாக்குகளுடன் சுவேந்து அதிகாரியை விட 16,706 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். இதன் மூலம் கடந்த 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் பெற்ற தோல்விக்கு மம்தா இம்முறை பதிலடி கொடுத்துள்ளார்.
