கொல்கத்தா: வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் விவிபேட் சீட்டுகள் மீட்கப்பட்ட விவகாரம் மேற்கு வங்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தத்தாபுகுர் போலீசார் எல்லைக்குட்பட்ட சுபாஷ் நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ஏராளமான விவிபேட் சீட்டுகள் (கட்சிகளின் சின்னம் பதிவானது) சிதறி கிடந்தன. நோபாரா தொகுதிக்கு உட்பட்ட 29 எண் கொண்ட வாக்குச்சாவடியைச் சேர்ந்த இந்தச் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுவாக வாக்குப்பதிவு முடிந்தவுடன் இந்தச் சீட்டுகள் அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பலத்த பாதுகாப்புடன் கூடிய பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்வாறு குப்பையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தேர்தல் பாதுகாப்பு குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மாதயாம்கிராம் தொகுதி பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங், ‘விதிமுறைப்படி இந்தச் சீட்டுகள் பாதுகாப்பு அறையில் இருக்க வேண்டும், இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் அளித்துள்ளார்.
சிபிஎம் வேட்பாளர் கார்கி சட்டர்ஜி இது தொடர்பாக கூறுகையில், ‘வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னால் எங்களுக்கு மின்னணு இயந்திரங்களை காண்பிக்க வேண்டும், அதுவரை வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனுமதிக்க மாட்டோம்’ என்றார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், ‘கண்டெடுக்கப்பட்ட விவிபேட் சீட்டுகள் அனைத்தும் தேர்தல் நாளில் பயன்படுத்தப்பட்டவை அல்ல, அவை மாதிரி வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட சீட்டுகள்’ என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக முக்கிய நிர்வாகியான லோக்கெட் சட்டர்ஜி, நோபாரா பகுதியில் விவிபேட் இயந்திரங்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் ரகசியமாக கடத்த முயன்றதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கப்போவது இன்று தெரிந்துவிடும். தற்போது நோபாரா விவிபேட் இயந்திரங்களை போலீசார் மற்றும் பி.டி.ஓ., அதிகாரிகள் இணைந்து எங்கோ கொண்டு சென்றதை எங்கள் கட்சித் தொண்டர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்யவே விவிபேட் இயந்திரங்கள் இவ்வாறு மாற்றப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன’ என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
