ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

ஊட்டி, பிப்.26: சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டி மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர், பல லட்சம் செலவு செய்து ரயிலை வாடகைக்கு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி ரயில் நிலையம் முதல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வரை உள்ள ரயில் பாதையில் இடைப்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் போதுமான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

நீலகிரி மாவட்ட எல்லைக்குள் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ரயில் நிலையங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் பிடித்து கொள்ளலாம் என வருகின்றனர். இந்த ரயில் நிலையங்களில் குடிநீர் வராத நிலையில் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் உள்ள அனைத்து ரயில் நிறுத்தங்களிலும், நிலையங்களிலும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: