பாலக்கோடு பகுதிகளில் வெள்ளரிக்காய் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

*தண்ணீர் பற்றாக்குறையால் அவதி

பாலக்கோடு : பாலக்கோடு பகுதிகளில் விவசாயிகள் நெல், ராகி, வாழை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வழக்கமாக தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பெல்ராம்பட்டி, சீரியம்பட்டி, கல்கூடபட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் குறுகிய கால பயிரான வெள்ளரிக்காயை சொட்டுநீர் பாசனம் மூலம் பருவ காலத்துக்கு ஏற்ப பயிரிட்டு வருகின்றனர். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விவசாயி மகேஷ் என்பவர் கூறுகையில், `கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. இந்நிலையில், கிணறுகளில் இருக்கும் குறைந்தளவு நீர் ஆதாரம் மூலம், 2 ஏக்கரில் ஒரு லட்சம் செலவில் வெள்ளரிக்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது, கொடிகளில் காய்கள் அதிகளவில் வந்துள்ளன. வெள்ளரிக்காய்களை எங்களிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சென்னை, வேலூர், மதுரை, திருச்சி மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

தற்போது, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை குறைய வாய்ப்புள்ளது. எங்கள் பகுதியில் உள்ள சின்னாற்றிற்கு குறுக்கே, தொல்லக்காது பகுதியில் அணை கட்டினால் இப்பகுதியில் உள்ள பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் நீர் பாசன வசதி பெறும். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் உயரும்,’ என்றார்.

Related Stories: