மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடிய மாணவ-மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் தயாராகி வருகிறார்கள்.

நாடு முழுவதும் இத்தேர்வை 22.79 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் இத்தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் (அனுமதி சீட்டு) நேற்று முன்தினம் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் அது திடீரென தள்ளிவைக்கப்பட்டு நேற்று காலை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று காலை தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியானது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் நுழைவுச் சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதால் தற்காலிக தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வார்கள். எனவே உலாவியின் கேச் மற்றும் குக்கீகளை அழிக்கவும் மறைநிலை/தனிப்பட்ட பயன்முறையில் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும். மேலும் வேறு உலாவியைப் பயன்படுத்தவும் (Chrome/Firefox பரிந்துரைக்கப்படுகிறது) அல்லது நிலையான இணையதளம் பெற்ற பிறகு சிறுது நேரத்திற்குப் பிறகு மீண்டும் முயற்சிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் 2026 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் விண்ணப்பதாரர் சிரமத்தை எதிர்கொண்டால், அவர் 011-40759000/011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அதுமட்டுமின்றி மாணவர்கள் மன அழுத்தம், பதற்றம் அல்லது மிகுந்த மனச்சுமையை உணர்ந்தால் டெலி-மானஸ் (24×7 தேசிய மனநல உதவி எண்) 14416 அல்லது 1-800-891-4416 தொடர்பு கொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த நுழைவுச்சீட்டில் தேர்வர்களின் பெயர், மையத்தின் முழு முகவரி போன்ற விவரங்கள் இடம்பெறும். நீட் தேர்வு 3 மணி நேரம் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இத்தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் சிரமம் இல்லாமல் எழுதுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: