புதுடெல்லி: நாடு முழுவதும் தற்போது கடும் வெப்ப அலை வாட்டி வதைக்கிறது. வரும் நாட்களில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசக்கூடும். எனவே அனைத்து சுகாதார நிலையங்களிலும் பிரத்யேக ஹீட் ஸ்ட்ரோக் மேலாண்மைப் பிரிவுகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறும், ஆம்புலன்ஸ் சேவைகள் போதுமான தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய சுகாதாரச் செயலாளர் புண்யா சலிலா வஸ்தவா எழுதிய கடிதம் : 2026ஆம் ஆண்டின் வெப்பக் காலத்திற்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் பல கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதே போல் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, அனைத்து சுகாதார நிலையங்களிலும் பிரத்யேக ஹீட் ஸ்ட்ரோக் மேலாண்மைப் பிரிவுகளைச் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதையும், ஆம்புலன்ஸ் சேவைகள் போதுமான தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்வதையும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க ஏதுவாக முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைப் பரப்புவதையும், பாதிப்புகளை உடனே பதிவு செய்வதையும் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் 2 ஆசிரியர்கள் பலி
ஒடிசா மாநிலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பள்ளி ஆசிரியர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பலியானார்கள். மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பெட்னோட்டி பகுதியில் வைத்யநாத் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியரான ராஜ்கபூர் ஹெம்ப்ராம், சுந்தர்கர் மாவட்டத்தில் குருண்டியா வட்டாரத்தில் உள்ள ஜராடா அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியரான அனுராக் எக்கா ஆகியோர் வெப்ப அலையில் சிக்கி பலியாகி விட்டனர்.
