புதுடெல்லி: இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன் மூலம் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.1.80 லட்சம் கோடி முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதி அளித்துள்ளது. வர்த்தகம், முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையை சமீபகாலமாக தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில், நியூசிலாந்துடன் கடந்த 2015ல் தேக்கமடைந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் தொடங்கப்பட்டன. இப்பேச்சுவார்த்தை 2025 டிசம்பரில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையேயான இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.
ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் முன்னிலையில் இந்தியாவும் நியூசிலாந்தும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கப் போவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் 100 சதவீத ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் திருப்பூர், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடை, தோல், காலணிகள், ரத்தினங்கள், ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட ஏற்றுமதி பொருட்கள் நியூசிலாந்தில் 100 சதவீத வரியில்லாத அணுகலை பெறும். இது அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகளில் போட்டித்தன்மையை மேம்படுத்தி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களையும், வேலைவாய்ப்புகளையும் கணிசமாக அதிகரிக்கும் என ஒன்றிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுதவிர, இந்தியா தனது உற்பத்தி துறைக்கு தேவையான மரக்கட்டைகள், நிலக்கரி, உலோகக் கழிவுகள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றிற்கு வரி இல்லாத உள்ளீடுகளையும் பெற்றுள்ளது. இது உற்பத்தி செலவுகளை குறைத்து, இந்திய தொழில்துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த உதவும். முன்னதாக, பீங்கான் பொருட்கள், தரைவிரிப்புகள், ஆட்டோமொபைல்கள், மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட முக்கிய இந்திய ஏற்றுமதிகளுக்கு நியூசிலாந்து 10 சதவீதம் வரை உச்சபட்ச வரி விதித்திருந்தது. இந்தியாவின் 70 சதவீத பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு வழங்கி வந்தது.
அதே சமயம், நியூசிலாந்தின் 70 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் படிப்படியாக வரியை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ள இந்தியா விவசாயிகளின் நலனை கருதி, 30 சதவீத பொருட்களுக்கு வரியை குறைக்கவில்லை. இதில் பால் பொருட்கள் (பால், கிரீம், மோர், தயிர், சீஸ்), விலங்கு பொருட்கள் (செம்மறியாட்டு இறைச்சியை தவிர), விவசாய பொருட்கள் (வெங்காயம், கொண்டைக்கடலை, பட்டாணி, சோளம், பாதாம்), சர்க்கரை, செயற்கை தேன், விலங்கு, தாவர அல்லது நுண்ணுயிர் கொழுப்புகள், எண்ணெய், வெடிமருந்துகள், ஆயுதங்கள், ரத்தினகற்கள், ஆபரணங்கள், தாமிரம், அலுமினியம் ஆகியவை வரி குறைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. நியூசிலாந்தின் ஆப்பிள், கிவி பழம், ஒயின், மருந்து பொருட்கள், இரும்பு, அலுமினியம் உள்ளிட்டவற்றிக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் அவற்றின் விலை குறையும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 5,000 தற்காலிக வேலைவாய்ப்பு விசாக்களை வழங்க நியூசிலாந்து ஒப்புக் கொண்டுள்ளது. இது ஐடி, பொறியியல், சுகாதாரம் மற்றும் கல்வி துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். ஆயுஷ் மருத்துவர்கள், யோகா ஆசிரியர்கள், இந்திய சமையல் கலைஞர்கள் மற்றும் இசை ஆசிரியர்களுக்கும் இதில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியா-நியூசிலாந்து இடையிலான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 2.4 பில்லியன் டாலராக (ரூ.22 ஆயிரம் கோடி) தற்போது உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரு மடங்காக, அதாவது 5 பில்லியன் டாலராக (ரூ.44 ஆயிரம் கோடி) உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. மேலும், நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ₹1.80 லட்சம் கோடி) முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.
பிரதமர் மோடி வரவேற்பு
நியூசிலாந்து உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தியா-நியூசிலாந்து உறவில் இன்று ஒரு மைல்கல் தருணம். இன்று கையெழுத்திடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நமது வளர்ச்சி கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இது வளர்ச்சிக்கு புதிய வழிகளை திறக்கும், வாய்ப்புகளை உருவாக்கும். நமது ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும்’’ என்றார். இது ஒரு தலைமுறையில் அமையும் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சனும் வரவேற்றுள்ளார்.
இந்தியாவுக்கான நன்மைகள்
- ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள், தோல் மற்றும் பொறியியல் பொருட்கள் போன்ற அதிக தொழிலாளர் தேவைப்படும் துறைகளைச் சார்ந்த அனைத்து இந்தியப் பொருட்களும், நியூசிலாந்தில் பூஜ்ஜிய வரியுடன் நுழைய அனுமதிக்கப்படும்.
- இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை மேற்கொள்ள நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.
- இந்திய தொழில் வல்லுநர்களுக்காக 5,000 தற்காலிக வேலைவாய்ப்பு விசா வழங்கப்படும். இதில், நியூசிலாந்தில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
- இந்தியாவிலிருந்து ஒயின் மற்றும் மதுபான ஏற்றுமதிகள் வரி விலக்குடன் மேற்கொள்ளப்படும்
- ஓசியானியா நாட்டைச் சேர்ந்த ஒயின்கள் சலுகை வரியுடன் இந்திய உள்நாட்டுச் சந்தையில் நுழையும்.
- விமான எரிபொருள், மருந்துப் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், பெட்ரோலியப் பொருட்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து நியூசிலாந்திற்கு அதிகம் ஏற்றுமதியாகும் பொருட்களாக உள்ளன. நியூசிலாந்தில் இருந்து மரம் மற்றும் மரப் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு, பதப்படுத்தப்படாத கம்பளி, பால் பொருட்கள், பழைய உலோக கழிவுகள், நிலக்கரி மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
