கொல்கத்தா: “மேற்குவங்கத்தில் பாஜ நிச்சயம் வெற்றி பெறும். பாஜ பதவி ஏற்பு விழாவுக்கு மீண்டும் மேற்குவங்கத்துக்கு வருவேன்” என பிரதமர் மோடி நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாரக்பூரில் நேற்று நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பாஜவுக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “1857ம் ஆண்டு நடந்த இந்திய சுதந்திர போராட்டத்தில் பாரக்பூர் முக்கிய பங்காற்றியது. இப்போது மேற்குவங்கத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த பாரக்பூர் தயாராகி வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேற்குவங்கத்தின் முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சிக்கு கிழக்கு பகுதியின் எழுச்சி மிகவும் இன்றியமையாதது. எனது தலைவிதியும், பொறுப்பும் மேற்குவங்கத்துக்கு சேவை செய்வது. இங்குள்ள மக்களை பாதுகாப்பது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை இல்லை. குற்றவாளிகளின் நெட்வொர்க்குகள் அதிகரித்து, ஒருபுறம் ஆலைகள் மூடப்படுகின்றன. மறுபுறம், வெடிகுண்டு தொழில்சாலைகள் வருகின்றன. திரிணாமுல் அரசு குண்டர்களை வேலைக்கு அமர்த்துகிறது. திரிணாமுல் காங்கிரசின் சின்டிகேட் விரிவடைகிறது.
ஆளும் கட்சி ஆட்சிக்கு பதிலாக, துஷ்பிரயோகம், மிரட்டல்களை செய்து வருகிறது. திரிணாமுல் காங்கிரசின் ஒரே வேலை முறைகேடுகளை செய்வது, அச்சுறுத்துவது, பொய்களை பரப்புவது, மற்றும் என்னையும், அரசியலமைப்பு நிறுவனங்களையும், ஆயுதப்படைகளையும் இழிவாக பேசுவது மட்டும்தான். மேற்குவங்கத்தில் போதிய வேலைவாய்ப்பின்மை காரணமாக பல வருடங்களாக இங்குள்ள இளைஞர்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே பாஜவின் முதல் முன்னுரிமையாக இருக்கும். இங்கு சின்டிகேட் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர, தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்க, பாஜவுக்கு வாக்களிக்க வேண்டும்.
அண்டை மாநிலங்களில் சமீபகாலமாக பாஜ பெற்ற வெற்றிகளுக்கு இணையாக ஒடிசா மற்றும் பீகாரை தொடர்ந்து தற்போது மேற்குவங்கத்திலும் தாமரை மலரும். மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வௌியானபின், பாஜ அரசு பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள நான் மீண்டும் மேற்குவங்கத்துக்கு வருவேன்” என உறுதியுடன் தெரிவித்தார்.
