போதுமான கையிருப்பு உள்ளது; வதந்திகளால் மக்கள் பீதியுடன் எரிபொருள் வாங்குகின்றனர்: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிக அளவு உயரக்கூடும் என்ற தகவல் பரவி ஆந்திராவில் நேற்று முன்தினம் பெட்ரோல் பங்குகளில் மக்கள் திரண்டனர். இதனால் 400க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபற்றி நேற்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது:
நாட்டின் சில பகுதிகளில் வதந்திகளால் பெட்ரோல் மற்றும் டீசலை மக்கள் பீதியுடன் வாங்கத் தூண்டப்பட்டனர். இது அசாதாரணமான விற்பனைக்கு வழிவகுத்தது . நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எரிபொருள் கையிருப்பு போதுமானதாக உள்ளது. சில பகுதிகளில் டீசல் போன்ற எரிபொருட்களுக்கான தேவையில் 30-33 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால்தான் சில சில்லறை விற்பனை நிலையங்கள் சிக்கல்களை எதிர்கொண்டன. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்கள் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்து வருகின்றன.

எரிபொருள் கிடைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களிடம் போதுமான கையிருப்பு உள்ளது. பொதுத்துறை சில்லறை விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. எனவே பொதுமக்கள் பீதியுடன் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியா போதுமான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தைப் பராமரித்து வருகிறது என்றார்.

Related Stories: