திருப்பதி கோயில் உற்சவம் 2ம் நாள் மலையப்பசுவாமி குதிரை வாகனத்தில் பவனி

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள நாராயணகிரி பூங்காவில் பத்மாவதி சீனிவாச பரிணயம் எனப்படும் திருக்கல்யாண உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். அதன் நேற்று முன்தினம் பரிணய உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. மலையப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்ட தங்க யானை வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலமாக சென்று நாராயணகிரி பூங்காவை அடைந்தார். அப்போது தேவி, பூதேவி தாயார்கள் தங்கப்பல்லக்கில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பரிணய உற்சவத்தின் 2ம் நாளான நேற்று மலையப்பசுவாமி தங்க குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் பவனி வந்து நாராயணகிரி பூங்காவில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அதேபோல் தேவி, பூதேவி தாயார்கள் தங்கப்பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அங்கு ஆகம முறைப்படி பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவம் நடைபெற்றது. அப்போது சுவாமிக்கும், தாயார்களுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மல்லிகை மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து தேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
12 மணி நேரம் காத்திருப்பு பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 79,878 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33,037 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.94 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 30அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

 

Related Stories: