திருநங்கைகள் மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருநங்கைகள் மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த சரத்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘காவல் நிலையத்தில் திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்தது தொடர்பாக வீடியோ வெளியிட்டேன். இதுதொடர்பாக காவல் துறையினர்பதிவு செய்துள்ள வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், ‘‘ஏற்கனவே கூறப்பட்ட தகவல்தான் பகிரப்பட்டது. புதிதாக எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை. தவறானது என தெரிந்ததும் வீடியோ நீக்கப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் கோட்டைச்சாமி, ‘‘மனுதாரர் காவல்துறை மற்றும் அரசுக்கு எதிராக தவறான தகவலை பரப்பி உள்ளார். திருநங்கை சமூகத்தின் பிரச்னைகளை அரசு கவனிக்கவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கியுள்ளார்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் அவருக்கு வந்த செய்தியை பகிர்ந்துள்ளார். பிற ஊடகங்களிலும் முன்பே வெளியாகி உள்ளது. எனவே, மனுதாரருக்கு நிபந்தனைமுன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அதேசமயம் திருநங்கை தீக்குளித்து உயிரிழந்தது நீதிமன்றத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. திருநங்கைகள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். அவர்களும் கடவுளின் பிள்ளைகளே. சமூகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சமூகமே அவர்களை புறக்கணித்து வறுமை நிலைக்குத் தள்ளுகிறது. இது சமூகத்தின் தோல்வி.

திருநங்கைகளையும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். குடும்பம் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாகவே அவர்களை பார்க்க வேண்டும். திருநங்கைகளும் மனிதர்களே, அவர்களின் மரியாதை, மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்கி, சுயதொழில் வாய்ப்புகள், நிலையான வாழ்வாதாரம், திருநங்கைகளின் தேவைக்கு ஏற்ப நலத்திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு தலைமைச் செயலர் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து இது தொடர்பான நடவடிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜூலை 26ல் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஆக. 3க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: