சிவகாசி: சிவகாசியில் ஏசி மெஷினுக்குள் 5 அடிநீள கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்தவர் அசோக். இவரது வீட்டில் உள்ள ஏசி மெஷினில் இருந்து உஷ்… உஷ்… என சத்தம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. எனவே மெஷினை பழுது நீக்குவதற்காக மெக்கானிக் சசி என்பவரை அழைத்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த சசி, ஏசி மெஷின் மூடியை திறந்தார். அப்போது ஏசிக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு சுருண்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சசி, உடனடியாக வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவித்ததால் அனைவரும் வெளியே ஓடிவிட்டனர். இதுகுறித்து உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள், நீண்டநேரம் போராடி ஏசி மெஷினுக்குள் இருந்த 5 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பை மீட்டனர். அதனை பத்திரமாக கொண்டு சென்று காட்டுப் பகுதியில் விட்டனர். ஏசி மெஷினுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
