உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (38). இவரது குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (எ) ஞானகணேசன்(48) குடும்பத்துக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த 2015 ஆகஸ்ட் 21ம் தேதி கணேசன் தரப்பைச் சேர்ந்த கோபிராஜ் (27), நாகராஜ், சென்னை ராயபுரம் விக்கி (எ) விக்னேஷ்(19), அலமு (எ) அமுல், கொளத்தூர் சிவந்திநகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(48), சிங்கராஜ்(38) ஆகியோர் சர்ச்சைக்குரிய இடத்தில் கம்பி வேலி அமைத்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கிருஷ்ணராஜ் தாக்கப்பட்டார். பின்னர் கணேசன் தரப்பை சேர்ந்தவர்கள் காரில் தப்பி செல்ல முயன்றபோது கிருஷ்ணராஜ் காரை வழி மறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கிருஷ்ணராஜ் மீது காரை ஏற்றினர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குரும்பூர் போலீசார் 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தாண்டவம் விசாரித்து கணேசன் (எ) ஞான கணேசன், கோபிராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். நாகராஜ், விக்கி (எ) விக்னேஷ், சிங்கராஜ், அலமு (எ) அமுல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
