வாகன காஸ் தட்டுப்பாடு எதிரொலி சென்னையில் அணிவகுத்து நின்ற ஆட்டோக்கள்: பல மணிநேரம் பங்க்குகளில் காத்திருக்கும் அவலம்; வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக ஓட்டுநர்கள் குமுறல்

சென்னை: வாகன காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஆட்டோக்கள் பல மணி நேரத்திற்கு மேலாக எரிப்பொருள் நிரப்ப பங்க்குகளில் வரிசைக்கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர். தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக எல்.பி.ஜி ஆட்டோ எரிவாயு தட்டுப்பாடு பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் மாற்று எரிபொருளான எல்.பி.ஜி.க்கு மாறிய ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள், தற்போது எரிவாயு கிடைக்காமல் வீதிகளில் வரிசை கட்டி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை முதலே சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, வடபழனி, ஆவடி, மற்றும் பூந்தமல்லி போன்ற இடங்களில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களில் ஆட்டோக்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டன. சில இடங்களில் ஒரு கிலோமீட்டர் தூரத்தை தாண்டியும் ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றன. ஒருமுறை டேங்க் நிரப்புவதற்கு ஓட்டுநர்கள் 3 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் உழைக்கும் நேரம் வீணாகி, சவாரிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் ஒருபுறம் இருந்தாலும், விநியோக சங்கிலியில் உள்ள குளறுபடிகளே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பல தனியார் எரிவாயு நிலையங்கள் ‘ஸ்டாக் இல்லை’ என்ற பலகையை தொங்கவிட்டுள்ளதால், அரசு எரிவாயு நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது.

இந்த தட்டுப்பாடு குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுவதாவது: ஒரு முறை காஸ் நிரப்ப அதிகாலை முதலே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த தட்டுப்பாட்டால் ஒரு நாளில் பாதியளவு நேரம் வரிசையிலேயே கழித்து விடுகிறோம். மீதமுள்ள நேரத்தில் கிடைக்கும் வருமானம், ஆட்டோ வாடகை மற்றும் அன்றாட தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. இது தவிர, தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில இடங்களில் எல்.பி.ஜி விலை சட்டவிரோதமாக உயர்த்திக் கேட்கின்றனர். ரூ.54 காஸ் விலை இருந்த நிலையில் தட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு பங்க்குகளில் வெவ்வேறு விலை வாங்கப்படுகிறது.

எங்களுக்கு ஆட்டோ ஓட்டினால் தான் வாழ்வாதாரம். அதனால் அந்த விலை கொடுத்து காஸ் நிரப்பிக்கொள்கிறோம். தேர்தல் அறிவித்த பின் ஓரளவிற்கு எல்.பி.ஜி ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது தேர்தல் முடிந்த நிலையில் காஸ் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு அனுப்புமா என்ற கேள்விக்குறி உள்ளது. இருப்பு வைக்கப்பட்டிருந்த பங்க்குகளில் கூட இப்போது காஸ் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு கூறினர். இந்த காஸ் தட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்கள் சரிவர ஓடாததால், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் தளங்கள் வாயிலாக ஆட்டோக்களை புக் செய்யப்பட்டால் தட்டுப்பாட்டை காரணம் காட்டி செயலியில் காட்டும் விலையை விட இரண்டு மடங்கு வரை அதிகம் ஓட்டுநர்கள் கேட்பதாக பயணிகள் புகார் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: