சென்னை: புதுச்சேரியில் இருந்து 1.68 லிட்டர் மது கொண்டுவந்தவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி புதுச்சேரி-தமிழ்நாடு கடலூர் மாவட்டம் ஆல் பேட்டா சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வாகனத்தில் வந்த கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரை சேர்ந்த வல்லரசு என்பவரிடம் போலீசார் சோதனை நடத்தியபோது அவரிடம் புதுச்சேரியில் இருந்து கொண்டுவந்த 750 மில்லி அளவு கொண்ட ஒரு நெப்போலியன் மது பாட்டில், 750 மில்லி அளவு கொண்ட ஒரு ஓல்ட் மங்க் மது பாட்டில், 180 மில்லி குவாட்டம் ஓல்டு மங்க் மது பாட்டில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மதுவை பறிமுதல் செய்த போலீசார் புதுச்சேரி மது தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளதால் வல்லரசு மீது தமிழ்நாடு மது தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது கடலூர் விரைவு நீதிமன்றத்தல் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வல்லரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாயிண்ட் பாலாஜி ஆஜராகி, சொந்த நுகர்வுக்காக ஒருவர் 4.5 லிட்டர் மது வைக்க அனுமதியளித்து கடந்த 2017ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் மனுதாரர் 1 லிட்டர் 680 மில்லி மது மட்டுமே வைத்திருந்துள்ளார். எனவே அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கூறமுடியாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, சொந்த பயன்பாட்டுக்காக மது வைத்திரு அனுமதிக்கும் தமிழ்நாடு மது விதியில் ஒருவர் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவை 4.5 லிட்டரும், வெளிநாட்டு மது 4.5 லிட்டரும், 7.8 லிட்டர் பீரையும், 9 லிட்டர் ஒயினையும் வைத்திருக்க முடியும். மனுதாரர் 1 லிட்டர் 680 மில்லி மட்டுமே வைத்திருந்திருக்கிறார். தமிழ்நாடு மது விதியின் அடிப்படையில் மனுதாரர் மீது வழக்கு தொடர முடியாது. எனவே, அவர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
