மதுரை: அழகர்கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடங்கிறது. ஏப். 29ம் தேதி தங்க பல்லக்கில் அழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடங்கிறது. நாளை மாலை கோயில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி சுந்தரராஜப்பெருமாள், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற உள்ளது. விழாவின் 3ம் நாளான ஏப். 29ம் தேதி மாலை வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக மாலை 6.15 மணிக்குள் கண்டாங்கி பட்டு உடுத்தி, தங்க பல்லக்கில் புறப்படும் அழகர், பக்தர்கள் வெள்ளத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். அங்கிருந்து வண்டியூர் வரை 490க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள்கிறார்.
ஏப். 30ம் தேதி காலை 6.30 மணிக்கு மூன்று மாவடி பகுதியில், அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலை வந்தடைந்த பின்னர் திருமஞ்சனம் முடிந்து தங்கக்குதிரை வாகனத்தில் திருவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றிக்கொண்டு இரவு 11.30 மணிக்கு வைகை ஆற்றிற்கு புறப்படுகிறார். மே 1ம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்குகிறார்.
தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. மே 2ம் தேதி காலை 11.30 மணிக்கு சேஷ வாகனத்தில், தேனுார் மண்டபத்தில் எழுந்தருளி, பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றிரவு 10 மணி முதல் விடிய, விடிய தசாவாதார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மே 4ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன்பு வையாளியாகி அழகர் மலைக்கு திரும்புகிறார். மே 6ம் தேதி உற்சவசாந்தி முறையுடன் கள்ளழகர் கோயில் திருவிழா நிறைவு பெறுகிறது.
* 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நேற்று அழகர்கோவிலில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு கலெக்டர் பிரவீன்குமார் கூறுகையில், ‘‘அழகர் புறப்படும் நேரத்தில் பக்தர்களின் வசதிக்காக 125 பேருந்துகள் இயக்கப்படும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். கடந்தாண்டு 8 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்’’ என்றார்
