திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ராஜஸ்தானில் இருந்து கடத்திய ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கலால் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக பெண் யூடியூபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் மங்களூரு வழியாக கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கோழிக்கோடு கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து கோழிக்கோடு கலால்துறை உதவி கமிஷனர் நிஜுமோன் தலைமையில் அதிகாரிகள் கோழிக்கோடு பந்தீரங்காவு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் சோதனை செய்யப்பட்டது. நீண்ட நேரம் சோதனை நடத்தியும் எதுவும் சிக்கவில்லை. கடைசியில் காரில் ஒரு ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த 3.3 கிலோ மெத்தாபிட்டாமின் மற்றும் 56 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3.50 கோடி ஆகும்.
அதைத்தொடர்ந்து காரில் இருந்த மலப்புறம் மாவட்டம் கச்சேரிக்கல் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷபீக் (35) மற்றும் கோழிக்கோடு தாமரைசேரி பகுதியைச் சேர்ந்த பாத்திமா நஸ்ரின் (20) ஆகிய 2 பேரை கலால்துறையினர் கைது செய்தனர். கோழிக்கோட்டில் நர்சிங் படித்து வரும் பாத்திமா நஸ்ரின் பிரபல யூடியூபர் ஆவார்.
காரில் பெண்கள் இருந்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதற்காகவே நஸ்ரினை ஷபீக் தன்னுடைய காரில் அழைத்து வந்துள்ளார். கோழிக்கோட்டில் இருந்து மங்களூருக்கு வரவழைத்து அங்கிருந்து அவரை ஷபீக் காரில் ஏற்றி கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இவர்களை கலால் துறையினர் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
