கவுகாத்தி: அசாம் முதல்வர் மனைவியின் பாஸ்போர்ட் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மனைவியான ரினிகி புயான் சர்மா மீது, கடந்த 4ம் தேதியன்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரினிகி 3 நாடுகளின் பாஸ்போர்ட்களை சட்டவிரோதமாக வைத்திருப்பதாகவும், துபாய் மற்றும் அமெரிக்காவில் சொகுசு பங்களாக்கள் வைத்திருப்பதாகவும் பவன் கேரா குற்றஞ்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, ரினிகி புயான் சர்மா அளித்த புகாரின் அடிப்படையில், கவுகாத்தி குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைதாவதை தவிர்க்க, தெலங்கானா உயர்நீதிமன்றத்தை அணுகிய பவன் கேராவுக்கு கடந்த 10ம் தேதி ஒரு வார கால இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த 15ம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்ததுடன், உரிய நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, கடந்த 20ம் தேதி கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் பவன் கேரா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், பவன் கேராவின் முன்ஜாமீன் மனுவை கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திவ்ஜோதி சைக்கியா தலைமையிலான அமர்வு, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பவன் கேராவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
