கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாற்றத்தின் அலை முதல் கட்ட வாக்கு பதிவிலே வெளிப்பட்டுள்ளது என்றும் கட்சிக்கு ஆதரவாக காட்டப்பட்ட ஆதரவு பாஜவின் வெற்றிக்கான சங்கொலியை எழுப்பியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டம் டம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பனிஹாட்டியில் நேற்று நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சர்வாதிகாரத்தின் மூலம் வங்காளத்தில் ஜனநாயகக் கோயிலை நொறுக்கிவிட்டது. ஆனால், மாநில மக்கள் தங்களின் ஆணையின் மூலம் அதை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.
வங்கத்தில் நீண்ட காலமாகத் தென்பட்டு வந்த மாற்ற அலைக்கு, நேற்று முன்தினத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு முத்திரை பதித்துள்ளது. முதல் கட்டத்தில் பாஜவுக்கு ஆதரவாகக் காட்டப்பட்ட ஆதரவு, அதன் வெற்றிக்கான சங்கொலியை எழுப்பியுள்ளது. தனது சர்வாதிகாரத்தால் ஜனநாயகக் கோயிலை நசுக்கிய மேற்கு வங்கத்தில், மக்கள் ஜனநாயகக் கோயிலை மீண்டும் கட்டத் தொடங்கியுள்ளனர். இப்போது, இரண்டாம் கட்டத்தில், இந்தக் கோயிலின் மீது வெற்றிக் கொடியை ஏற்ற வேண்டும். மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திரிணாமூல் காங்கிரசின் குண்டர்களுக்கு ஒளிந்துகொள்ள இடமிருக்காது.
50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மேற்கு வங்க தேர்தலில் வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. இதன்மூலம் மக்கள் மாற்றத்தை விரும்புவது தெளிவாகிறது. இந்த தேர்தலில் பாஜ வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெறும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். படகு பயணம் பிரசாரத்துக்காக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று காலை ஹூக்ளி நதியில் படகு பயணம் மேற்கொண்டார். கையில் கேமராவுடன் சென்ற மோடி முக்கிய இடங்களை படம் பிடித்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டுள்ளதாவது: ஒவ்வொரு வங்காளிக்கும் கங்கை நதி மிக சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. கங்கை வங்கத்தின் ஆன்மாவில் பாய்கிறது. இது ஒரு முழு நாகரிகத்தின் காலத்தால் அழியாத ஆன்மாவை தன்னகத்தே கொண்டுள்ளது. இன்று (நேற்று) காலை கொல்கத்தாவில், ஹூக்ளி நதிக்கரையில் சிறிது நேரம் செலவிட்டேன். அன்னை கங்கைக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.
