கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 152 பேரவை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹிங்கல்கஞ்ச் தொகுதி அரசியல் ரீதியான மிகவும் உணர்திறன் மிக்க தொகுதியாகும். இந்த தொகுதியில் சந்தேஷ்காலி போராட்டத்தில் ஈடுபட்ட ரேகா பத்ரா பாஜ வேட்பாளராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மாவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஹிங்கல்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி(இன்ஸ்பெக்டர்) சந்தீப் சர்க்கார், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், உள்ளூரில் உள்ள சில நபர்களுடன் சேர்ந்தது செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால், மாநில தலைமை செயலாளர் துஷ்யந்த் நரியாலாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து ஹிங்கல்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சந்தீர் சர்க்காலை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிட்டுள்ளது. ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி மேற்கு வங்க போலீஸ் அதிகாரி ஒருவரை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணை யம் அதிரடியாக உத்தர விட்டுள்ளது.
