ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நிறைவு வர்த்தக ஒப்பந்தத்தை தொடர இந்தியா, அமெரிக்கா சம்மதம்

புதுடெல்லி: இந்தியா – அமெரிக்க இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நீண்டஇழுபறிகளுக்கு பின் கடந்த பிப்ரவரி 7ம் தேதி முடிவானது. இந்த ஒப்பந்தம் தொடர்பான முக்கிய அம்சங்கள் அடங்கிய ஆவணம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வௌியானது. அதன்படி இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்பு கொண்டது. ஆனால், அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை நீக்கி அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து பிப்ரவரி 24 முதல் 150 நாள்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத வரிகளை விதித்து டிரம்ப் உத்தரவிட்டதால், கடந்த மாதம் மேற்கொள்ளப்பட இருந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அதிகாரிகள் குழுவினர் வாஷிங்டன் சென்றிருந்தனர்.

அங்கு கடந்த 20ம் தேதி அமெரிக்க வர்த்தக துறை அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த 3 நாள் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் தொடர்ந்து ஈடுபட இந்தியாவும், அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிக்கையில், “சந்தை அணுகல், கட்டணமில்லா நடவடிக்கைகள், வர்த்தகத்துக்கான தொழில்நுட்ப தடைகள், சுங்கம் மற்றும் வர்த்தக வசதி, முதலீட்டு ஊக்குவிப்புகள், பொருளாதார பாதுகாப்பு சீரமைப்பு மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான உணர்வுடன் நடந்தது. முக்கிய விஷயங்களில் முன்னேற்றத்தை செயல்படுத்தும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: