திமுக வெறுப்பு அரசியலை மட்டுமே விஜய் பேசுவது உள்நோக்கம் கொண்டது – திருமாவளவன்

தவெக தலைவர் விஜய், திமுக வெறுப்பு அரசியலை மட்டுமே பேசி வருவது உள்நோக்கம் கொண்டது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அங்கனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என நம்புகிறேன் என கூறினார்.

தவெக தலைவர் விஜய் எப்போது பார்த்தாலும் திமுக வெறுப்பு அரசியலை மட்டுமே பேசுவது உள்நோக்கம் கொண்டது போல் தெரிகிறது என்றார். நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார். அறுதி பெரும்பான்மையுடன் திமுக தனித்து வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அதே போல நடிகர் விஜய், திமுக எதிர்ப்பை மட்டுமே மூலதனமாக்கி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே முன்னிறுத்தி பரப்புரை மேற்கொண்டார்.

அவருடைய எதிர்கால திட்டங்கள் என்ன, கொள்கை கோட்பாடுகள் என்ன என்பதை பற்றியெல்லாம் கட்சி துவங்கியதில் இருந்து ஒருநாள் கூட பேசியதில்லை. ஆகவே கட்சி துவங்கியதில் இருந்து தற்போது வரை அவர் வெளிப்படுத்தியது திமுக எதிர்ப்பு மட்டுமே, இது உள்நோக்கம் கொண்டது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவே மீண்டும் மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி மலரும். சமூகம் தழைத்தோங்கும். எங்களை எதிர்த்து நிற்கும் சந்தர்ப்பவாதிகளுக்கு மக்களிடம் நன்மதிப்பு இல்லை என்று திருமாவளவன் பேசி இருக்கிறார்.

Related Stories: