சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி செயல்பட்டதை எவரும் மறுக்க முடியாது. நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதோடு, சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்கிற ஒரு கருத்தியலை மு.க.ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறார்.
கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றிய பாஜ அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வில் பாரபட்சம், புதிய கல்விக் கொள்கை போர்வையில் மும்மொழி திணிப்பு, கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு திணிப்பு, வெள்ள நிவாரண நிதி புறக்கணிப்பு, மெட்ரோ ரயில் திட்ட புறக்கணிப்பு என வஞ்சிக்கப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்தளவிற்கு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய பாஜ அரசு இதுவரை நடத்தியிருக்கிறது.
ஆனால், நிதிப் பகிர்வில் எத்தகைய அநீதிகள் இழைக்கப்பட்டாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு மாநில அரசின் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. பாஜவால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும், தமிழ்நாட்டிற்கு ஆதரவாக அக்கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிற அதிமுக இதுவரை தமிழ்நாட்டின் உரிமைக்காக பேசியது கிடையாது. பாஜவின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள அதிமுக கூட்டணியை புறக்கணிக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் முதல் ஜனநாயகக் கடமையாகும்.
மாநில உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்பி வருகிற மு.க.ஸ்டாலின், மாநிலம் கடந்து தேசிய அளவிலும் இன்று பாராட்டுகளை பெற்று வருகிறார். கடந்த அதிமுகு ஆட்சி என்பது தமிழ்நாட்டின் இருண்ட காலம். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு சாத்தான்குளத்தில் தந்தை – மகன் லாக்கப்பில் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி, பாலியல் பலாத்காரத்திற்கு பொள்ளாச்சி, நிர்மலா தேவி விவகாரம் உள்ளிட்ட பட்டியலே சாட்சியாகும். எனவே, மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடர வாக்காளர்களுக்கு நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன.
அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சியாகவே மக்கள் கருதுகிறார்கள். இந்த அடிப்படையில் நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் தமிழ்நாட்டு மக்கள் தங்களது மேலான வாக்குகளை திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களித்து அமோக ஆதரவு வழங்கி மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்திற்கேற்ப உங்கள் நல்லாதரவினை வழங்க இருகரம் கூப்பி அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
