அருப்புக்கோட்டை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், இந்த தேர்தல் என்பது தமிழகத்திற்கும், டெல்லிக்கும் நடக்கின்ற மிக பெரிய போர் என்றும், இந்த போரில் நிச்சயம் தமிழகம் வெற்றிவாகை சூடும் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (சாத்தூர் ராமச்சந்திரன்) கூறி இருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது மனைவி ஆதிலட்சுமியுடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடைபெற்று வரும் போரில் தமிழ்நாடு வெல்லும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராமச்சந்திரன் இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும், மீண்டும் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி வரும் என்பதற்கு அச்சாணியாக இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. எங்களை பார்த்து மக்கள் வெளிப்படுத்தும் உற்சாகம் எங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்து உள்ளது. இந்த தேர்தல் மூலம் தொடர்ச்சியாக மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி வரும் என்றார்.
