தேர்தல் களத்தில் திமுககாரனை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது அயராது உழைத்ததை வெற்றிகரமாக அறுவடை செய்ய இன்று ஒருநாள் அதிக விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்போம் என்பதே தமிழ்நாட்டு வாக்காளர்களின் உறுதியான முடிவு. நம் அரசியல் எதிரிகள் பரப்புகின்ற அவதூறுகளைத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ளி, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியையும் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக உடன்பிறப்புகள், திமுக போட்டியிடும் தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் கடுமையாக உழைக்கின்றனர். கூட்டணி கட்சியினரும் திமுக போட்டியிடும் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிப்பட்ட உடன்பிறப்புகளின் அயராத உழைப்பு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ம் தேதியன்றும் விழிப்புடன் தொடர்ந்திட வேண்டும்.

ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக்கும் பாக நிலை முகவர்களை (BLA 2) நியமித்து, 10 உறுப்பினர்களைக் கொண்ட பாகக் குழுக்களையும் (BLC) அமைத்து, அதில் இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் இடம்பெறச் செய்துள்ளோம். அத்துடன், தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் டிஜிட்டல் பூத் ஏஜண்ட் எனப்படும் BDA-க்களையும் நியமித்து ஒவ்வொரு பூத் வாரியாக தேர்தல் களப் பணியை மேற்கொண்டிருக்கிறது திமுக. அத்துடன், ஓரணியில் தமிழ்நாடு செயல்பாட்டின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று, அவற்றை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்துள்ளனர் திமுகவினர்.

நீங்கள் அயராது உழைத்ததை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நாளான ஏப்ரல் 23 அன்று, இத்தனை நாட்கள் கடுமையாகப் பணியாற்றியதைவிட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும். தேர்தல் களத்தில் திமுககாரனை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது என்கிற பெருமை நமக்கு உண்டு. அதை 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திலும் முழுமையாக மெய்ப்பித்து, மகத்தான வெற்றிக்கு ஒவ்வொரு உடன்பிறப்பும் காரணமாக இருந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய அன்புக் கட்டளை.

அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி கண்காணிப்பகத்தின் (வார்ரூம்) மூலமாக உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படும் தகவல்கள், வாக்குப்பதிவு நாளன்றும் தொடர்ந்திடும். திமுகவின் சட்டத்துறை சார்பில் கண்காணிப்பகத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு நாளில் பணியாற்றும் பூத் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்ட திமுக உடன்பிறப்புகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். திமுகவினர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானவற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

வாக்கு பதிவன்று BLA 2 மற்றும் BLC, BDA ஆகியோர் தங்களது வாக்கினை முதல் வாக்காக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், தங்களது பாகத்தில் உள்ள கழக ஆதரவு, தோழமைக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளையும், விரைந்து பதிவு செய்திடவும் ஒருவர் கூட விடுபடாத வகையிலும் திமுக நிர்வாகிகள் ஆவன செய்ய வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) எக்காரணத்தை முன்னிட்டும் ஆரம்பத்திலேயே தேர்தல் அதிகாரி கொடுக்கும் 17C-இல் கையொப்பமிடக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே, கையொப்பம் இட்டு நகல் பெற வேண்டும்.

வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட் CU, பேலட் யூனிட் BU, வாக்குப்பதிவை சரிபார்க்கும் காகிதங்கள் நிறைந்த VVPAT ஆகியவை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு, சீல் சேதமடையாமல் அவை சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்போது, மிகவும் கவனமாக அதில் கழகத்தின் பூத் ஏஜெண்ட் பங்கேற்பதுடன், , VVPAT காகிதச்சீட்டுகளை EVM எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகு அவை அழிக்கப்பட வேண்டும். அப்போது இயந்திரத்தில் “ZERO” என்று காட்டுவதை உறுதி செய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு சீட்டுகளைத் தனியாக பிங்க் காகித கவரில் வைத்து சீலிடப்பட்டு தேர்தல் அதிகாரியுடன் முகவரும் கையொப்பம் இட வேண்டும்.

வாக்குப்பதிவுக்காக வழங்கப்பட்ட காகித முத்திரைகளின் வரிசை எண் மற்றும் எண்ணிக்கையையும் (CU+BU+VVPAT எண்கள் போன்றவை) இயந்திரங்களில் ஏதேனும் ஒன்று மாற்றம் செய்யப்பட்டால் அதன் விவரத்தையும் வாக்குப்பதிவு முடிந்தபிறகு குறிப்புப் பட்டியலில் பதிவிட்டு, தலைமை அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பமிட வேண்டும். வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் தறுவாயில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுவதை உறுதிசெய்து, பின்பு CU பட்டனில் Close என்று தேர்தல் அதிகாரி அழுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர்கள் படிவம்17C உள்ளிட்ட அனைத்துப் படிவங்களிலும் தேர்தல் அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பம் இடவேண்டும். கடைசியாக, படிவம் 17C நகல் பெற்று CU + BU + VVPAT இயந்திரங்கள் சீலிடப்பட்டு, அவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் படிவம் 17C நகலினை தவறாமல் பெற்று அதன் அசலினை வேட்பாளர் வசம் சேர்க்க வேண்டும். மென்நகலினை (Soft Copy) தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் எந்த ஒன்றையும் தவறவிடாமல் விழிப்புடன் இருந்து திமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். வெற்றி நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே. விழிப்புடன் பணியாற்றி வெல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: