நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போதமலை மலை கிராமங்களுக்கு காலங்காலமாக தலையில் சுமந்தும், கழுதைகள் மீதும் வைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், திமுக அரசு சாலை அமைத்து வருவதால், முதன்முறையாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் போதமலை மலைக்கிராமம் உள்ளது. போதமலை கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு பகுதியாகும். வடக்கே ஜருகுமலையும், தெற்கே கொல்லிமலையும் சூழ்ந்துள்ள இப்பகுதி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
சுமார் 13 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பகுதியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். ராசிபுரம் தாலுகாவில் உள்ள போதமலைக்கு, நாடு சுதந்திரம் பெற்றது முதல் சாலை வசதி இல்லாததால், மலையில் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மலை கிராம மாணவ, மாணவிகள், வேலைக்காக ராசிபுரம், சேலம், நாமக்கல், ஆத்தூர், திருச்செங்கோடு செல்பவர்கள் மலையில் இருந்து கீழே வந்து செல்வதில் சாலை வசதியில்லாததால் அவதிப்பட்டு வந்தனர்.
போதமலையில் விவசாயிகளின் விளைபொருட்களை கொண்டு வந்து சந்தைப்படுத்துவதிலும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. தீ விபத்து காலங்களில் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். பெரும்பாலான மாணவிகள் உயர்கல்விக்காக கீழே வருவதில் சிரமம் இருந்ததால், உயர்கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு தேர்தலின் போதும், மலையில் வசிக்கும் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்துவதற்காக, வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலின் போது பயன்படுத்தப்படும் மற்ற பொருட்கள், கழுதைகள் மீது வைத்தும், தலைச்சுமையாகவும் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இவர்களுடன் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளும் நடந்தே செல்லும் நிலை காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு போதமலை மலைகிராமத்திற்கு நேரில் வாக்கு சேகரிக்க சென்ற நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, திமுக ஆட்சி அமைந்ததும் போதமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. இதனையடுத்து, ராஜேஸ்குமார் எம்பி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், அப்போதைய கலெக்டர் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
தமிழக முதல்வரிடம் தெரிவித்து, ஒப்புதல் பெற்று சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து பணிகளை துவக்கினர். முன்னதாக மலைப்பாதை அமைக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து போதமலைக்கு சாலை அமைக்கும் பணிக்காக அரசு ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு கட்டமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் தலையில் சுமந்துதான் வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் கொண்டு செல்லப் பட்டது.
தற்போது புதுப்பட்டியில் இருந்து கெடமலை வரை, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.34 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, போதமலைக்கு சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தலைச்சுமையாக எடுத்து செல்லும் நிலை தடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போதமலையில், மேலூர் கீழூர் மற்றும் கெடமலை ஆகிய 3 மலைக்கிராமங்கள் உள்ளன.
போதமலைக்கு உட்பட்ட கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய கிராமங்களில் மொத்தம் 1108 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக கீழூர், கெடமலை ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலூர் மற்றும் கீழூர் ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் 827 வாக்காளர்களும், கெடமலை வாக்குச்சாவடியில் 281 வாக்காளர்களும் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் முதல், போதமலைக்கு சாலை வசதி இல்லாத காரணத்தால், வாக்குப்பெட்டிகள் கழுதைகளின் மூலமும், தலைச்சுமையாகவும் எடுத்து கரடுமுரடான மலைப்பாதையில் கொண்டு செல்லப்பட்டன.
வாக்குப்பதிவு முடிந்ததும் இரவு நேரத்தில், வாக்கு பெட்டிகளுடன் மீண்டும் தரைப்பகுதிக்கு தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமாக எடுத்து வந்து, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகமான பின்னரும், போதமலைக்கு இந்த சிரமம் நீடித்தது. இதனிடையே, திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டதன் காரணமாக, நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், முதல்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.
இன்று சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, போதமலையில் உள்ள மலை கிராமங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தொகுப்புகள் மற்றும் படிவங்கள் ராசிபுரம் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன், வாகனங்களில் மலைப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டன. சுமார் ஒரு மணி நேர பயணத்துக்கு பின்னர், போதமலை மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன. முதன்முறையாக போதமலைக்கு வாகனம் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதால், கழுதைகள் மீது வைத்தும், தொழிலாளர்கள் தலைச்சுமையாகவும் கொண்டு செல்லும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அலுவலர்கள் தெரிவித்தனர்.
* ஒரு கிராமத்துக்கு அஞ்சே ஓட்டு!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை மலைக்கிராமத்தில் தற்போது வெறும் 5 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இவர்கள் ஜனநாயக முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்த இந்திய தேர்தல் ஆணையம் பிரத்யேக வாக்குச்சாவடியை அமைத்துள்ளது. இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் நேற்று பலத்த பாதுகாப்புடன் வெள்ளிமலை கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் ஆரம்ப பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏப். 12ம் தேதி தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ரஞ்ஜீத் சிங், இந்த மலைக்கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதிகளை உறுதி செய்ததோடு, மலைவாழ் மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
* 12 வாக்கு… 160 கி.மீ பயணம்…
கன்னியாகுமரி மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியின் உச்சியில் அமைந்துள்ள அப்பர் கோதையாறு பகுதியில், மேல்தங்கல் கிராமத்தில் பத்மநாபபுரம் தொகுதியின் முதல் வாக்குச்சாவடி அமைந்துள்ளது. திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியில் இந்த வாக்குச்சாவடி வருகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,800 அடி உயரத்தில் உள்ள இங்கு நீர்மின் நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாக்காளர்களாக உள்ளனர். இந்த வாக்குச்சாவடிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் நேரடி சாலை வசதி கிடையாது. மின்வாரியம் தனது தேவைக்கு கோதையாரில் இருந்து அப்பர் கோதையருக்கு வின்ச் வசதியை பயன்படுத்தி வருகிறது. அல்லது சாலை மார்க்கமாக மாஞ்சோலை வழியாக வாகனங்களில் சென்று வருகின்றனர்.
எஸ்ஐஆர் திருத்தத்துக்கு பிறகு தற்போது 12 வாக்குகள் இங்கு உள்ளன. இந்த வாக்குகளை பதிவு செய்ய திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் இருந்து நேற்று வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 11 தேர்தல் பணியாளர்கள்,பாதுகாப்புக்காக 3 போலீசார் 3 வாகனங்களில் சென்றனர். இவர்களிடம் வாக்குப்பதிவு இயந்திரம், கூடுதலாக மாற்று இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவுக்கான ஆவணங்களை பத்மநாபபுரம் தொகுதி தேர்தல் அலுவலர் வினய் குமார் மீனா வழங்கினார். இவர்கள் குலசேகரத்தில் உள்ள திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் இருந்து நாகர்கோவிலில் வழியாக நெல்லை மாவட்டம் பணகுடி, மணிமுத்தாறு, மாஞ்சோலை, குதிரைவெட்டி வழியாக 160 கிமீ தூரம் பயணம் செய்கின்றனர். இதில் 60 கிமீ தூரம் மலைப்பகுதி ஆகும். அடர்ந்த வனப்பகுதியான இங்கு யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி வழியாக சவாலான பயணத்தை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்துக்காக மேற்கொள்கின்றனர். குமரி மாவட்டத்தில் முதலில் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படும் வாக்கு இயந்திரம் அதுவே ஆகும். கடைசியாக வந்து சேரும் இயந்திரமும் இதுவே ஆகும்.
* கொடைக்கானல், தேனி மலைக்கிராமங்களுக்கு குதிரை, கழுதையில் ஓட்டு மெஷின்கள்
திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் தாலுகாவை சேர்ந்தது வெள்ளகவி மலைக்கிராமம். அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள இக்கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது. கொடைக்கானல் நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரமுள்ள வட்டக்கானல் பகுதி வரை வாகனம் மூலம் சென்று, அங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் இக்கிராமத்திற்கு செல்ல வேண்டும். இவ்வூரில் 250க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அங்கேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி வெள்ளகவி வாக்குச்சாவடிக்கு வட்டக்கானல் பகுதியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. உடன் 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணிக்காகவும், துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பாகவும் சென்றனர். இன்றுமாலை வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வெள்ளகவி மலைக்கிராமத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கும்பக்கரை அருவி வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் குதிரை மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து திண்டுக்கல்லில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கழுதையில் சென்ற இயந்திரங்கள்: கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர், பெரியூர் மலைக்கிராமங்களுக்கு தேனி மாவட்டம், பெரியகுளம் சோத்துப்பாறை வழியாக சுமார் 10 கிமீ தூரத்திற்கு வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும். இங்குள்ள 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக இங்கேயே வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள் நேற்று பெரியகுளம் சோத்துப்பாறை அருகே இருந்து கழுதை மூலம் கொண்டு செல்லப்பட்டது. உடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக சென்றனர்.
அகமலைக்கு குதிரையில் சென்ற இயந்திரங்கள்: தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியை சேர்ந்த ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், குறவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கான வாக்குச்சாவடி மையத்திற்கு பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை பகுதியில் இருந்து தேர்தல் அதிகாரிகள் குதிரையின் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட தேர்தல் உபகரணங்களை கொண்டு சென்றனர்.
