கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் வழங்கப்படுவதாக பிஏபி அலுவலகத்தை இன்று முற்றுகையிட முடிவு

பொள்ளாச்சி, பிப்.24: பொள்ளாச்சியை அடுத்த 120 அடியுள்ள ஆழியார் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், இரு மாநில ஒப்பந்தப்படி கேரள மாநிலத்துக்கு குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்தாண்டில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை தொடர்ந்து, கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு இருப்பதுடன் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதாக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில், ஆழியார் அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பதை கண்டித்து, இன்று (24ம் தேதி) ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன்புதூர் பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்கள் எதிர்ப்பை காட்ட உள்ளனர். இதற்காக, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோக பணியை பழைய ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் தீவிரப்படுத்தினர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

ஆழியார் அணையில் இருந்து கேரளாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 7.25 டிஎம்சி தண்ணீரே திறக்க வேண்டும். ஆனால், கடந்தாண்டு கேரளாவுக்கு அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஒருபோக நெல் சாகுபடிக்கே தண்ணீர் கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதி முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கமாக இருந்தும், அண்மைகாலமாக கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதால் ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வினியோகம் குறைந்துள்ளது. மழைபெய்யும்போது கேரளாவுக்கு தண்ணீர் திறப்பை குறைத்துவிட்டு, மழையில்லாத வறட்சி காலத்தில் கேரளாவுக்கு தண்ணீர் திறப்பதை அதிகாரிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தாண்டில், கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேரளாவுக்கு வழங்க வேண்டிய அளவைவிட கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இதை தடுக்க வலியுறுத்தி இன்று பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>