திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

பகுதி 3

திருவானைக்காவல்

‘இம்மென்னு முன்னே எழுநூறும், அம்மென்றால் ஆயிரம் பாடல்கள் பாடக் கூடிய பெருங்காளமேகம்’
– என்று தன்னைப் பற்றியே தன் வெண்பா ஒன்றில் அறிமுகப்படுத்திக் கொண்ட புலவர் இவர்.

ஓரிரவு நேரத்தில், அன்னை அகிலாண்டேஸ்வரி, தன் வாயிலுள்ள தாம்பூலச் சாற்றை அவர் வாயில் உமிழ்ந்த அக்கணமே மடைதிறந்தாற்போல் நாலுவகைக் கவிகளையும் பொழியும் கரிய மழை மேகமாக மாறினார். சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த சிலேடைக் கவிதைகளையும், “திருவானைக்கா உலா” எனும் பெரும் பிரபந்தத்தையும் எழுதி அருளிச் செய்தார். ஆனைக்கா விநாயகர் மீது பின்வரும் அழகிய செய்யுளைப் பாடியருளியுள்ளார்.

“ஏரானைக் காவிலுறை என்னானைக்கு அன்றளித்த
போரானைக் கன்றுதனைப் போற்றினால் – வாராத
புத்தி வரும் பத்தி வரும் புத்திர உற்பத்தி வரும்
சத்தி வரும் சித்தி வரும் தான்”

[என் ஆனைக்கு – என் அன்னையாகிய பெண் யானை வடிவெடுத்து நின்ற உமையம்மைக்கு போரானைக் கன்று – முன்னர் சிவபெருமான் அளித்தருளிய போராற்றல் வல்ல ஆனைமுகனாம் விநாயகன் வாராத – பிறவற்றால் கிடைக்கப்பெறாத]`தலைவலையத்து’ எனத் தொடங்கும் காஞ்சித் திருப்புகழில், “முருகனது ஆறங்கங்களாகிய மயில், வேல், திருத்தோள்கள், தெய்வயானை, வள்ளி, திருவடிகள் இவற்றை அமைத்து, ‘பெரிய பிரபந்தங்களைப் பாடவல்ல காளப்புலவன் இவன்’ என்று என்னைப் போற்றும்படியான பிறப்பு வாய்க்காதோ?” என்று கேட்கிறார் அருணகிரியார். இங்கு வரும் “காளப்புலவன்”, கவி காளமேகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. [இருவரும் வாழ்ந்த காலம் குறித்த முடிவான தகவல் ஏதும் நம்மிடம் இல்லை].

“தலைவலையத்துத் தரம்பெறும் பல
புலவர் மதிக்கச் சிகண்டி, குன்றெறி
தரும் அயில், செச்சைப் புயம், கயம்,
குறவஞ்சியோடு தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும் ப்ரபந்தம்

விளம்பு காளப் புலவன் எனத் தத்துவம் தரம் தெரி
தலைவன் எனத் தக்கறம் செயும் குண
புருஷன் எனப் பொற்பதம் தரும் ஜனனம்
பெறாதோ? பொறையன் எனப் பொய்ப் ப்ரபஞ்சம்
அஞ்சிய துறவன் எனத் திக்கியம்புகின்றது
புதுமை அலச் சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ?’’

ஆனைக்கா அண்ணல் மீது ஆராத காதல் கொண்டவர் வாரியார் சுவாமிகள். சாதாரணமாகக் கோயில்களில் சொற்பொழிவு செய்வது மட்டுமே அவரது வழக்கம். ஆனால் திருவானைக்காவில் மட்டும், பஞ்சப் (5) பிராகாரத் திருப்புகழ் விழா நடத்திவந்தார். “இரவு 9.30 மணிக்கு ஆனைக்கா கோயிலில் திருப்புகழ் பக்தர்கள் கூடுவர். சுவாமிகள் பாடிக்கொண்டே செல்ல, பக்தர் கூட்டம் பின் தொடர்ந்து வரும். இடையிடையே தாம் பாடுகின்ற பாக்களுக்கு விரிவுரை கூறுவார்.

உடன் வரும் மக்களும் உருக்கமுடன் கேட்டு மகிழ்வர். நான்காம் பிராகாரம் முடிந்து, ஐந்தாம் பிராகாரத்தை அடையும் போது, நானும் வருகிறேன் என்பது போல, கீழ்த்திசையில், கிரணக் கரங்களை நீட்டியபடி கதிரவன் உதித்துக் குதித்து வருவான். காலை 8 மணி அளவில் விழா நிறைவுறும். குறைந்தது 4 அல்லது 5 மைல் தொலைவு நடந்து சுவாமிகள் திருக்கோயில் வலம் வருவார்.”

[செய்தி ஆதாரம் – ‘திருவானைக்கா திருப்புகழ் விரிவுரை’ – குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்]

“நாடித் தேடித் தொழுவார்பால்
நானத் தாகத் திரிவேனோ
மாடக் கூடற் பதிஞான
வாழ்வைச் சேரத் தருவாயே
பாடற் காதற் புரிவோனே
பாலைத் தேனொத் தருள்வோனே
ஆடற் றோகைக் கினியோனே
ஆனைக் காவிற் பெருமாளே”
– என்பது ஒரு ஆனைக்கா திருப்புகழ்.

“மாடங்கள் நிறைந்த கூடற்பதியான மதுரை, விராட புருஷனுக்கு துவாதசாந்தம் ஆகும். இது, நம் உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது. “யோகஸ்தானம், மேலைப் பெருவெளி; அங்கு விளையும் ஞான வாழ்வை எனக்குத் தர மாட்டாயா?” என்று கேட்கிறார் அருணகிரியார். இப்பாடலுக்குப் பொருள் விளக்கம் அளித்த வாரியார் சுவாமிகளின் வேண்டுதலை முருகன் செவிமடுத்துவிட்டான் போலும்! 17-10-1993 அன்று ஆனைக்காவில் நிகழ்த்தியதுதான் அவரது இறுதிச் சொற்பொழிவு. அவர் விரும்பியபடியே துவாதசாந்தப் பெருவெளியில் கூடும் ஞான வாழ்வை அளித்துவிட்டான் முருகன்.

“வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவும்” பெருமானாயிற்றே அவன்!!
திருவானைக்காவிற்குரிய சப்த ஸ்தானங்கள் பின்வருமாறு.

1. திருவானைக்கா
2. திருசெந்துறை
3. திருப்பராய்த்துறை
4. திருப்பைஞ்ஞீலி
5. திருப்பாச்சிலாச்சிரமம்
6. திருவேதிகுடி
7. திருஆலந்துறை

கச்சியப்ப முனிவர், திருவானைக்கா தலத்திற்கான புராணத்தை இயற்றியுள்ளார். கமலை ஞானப் பிரகாசர், ‘தந்திவனப் புராணம்’ என்ற நூலை அளித்துள்ளார். ‘திருவானைக்காத் திருப்பணி மாலை’ எனும் நூலின் மூலம், கோயிலிலுள்ள மதில்கள், கோபுரங்கள், மண்டபங்கள் முதலியவைகள் சோழர்களாலும், பாண்டிய, நாயக்க மன்னர்களாலும், பக்தர்களாலும் அவ்வப்போது திருப்பணி செய்யப்பட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம். “ஆசிரியர் பெயர் தெரியவில்லை; கையெழுத்துப் பிரதி மிகவும் சிதிலமான நிலையிலுள்ளது” என்கிறார் அறிஞர் உ.வே.சா அவர்கள். திருப்புகழ் பாடப்பெற்றிருக்கும் பிருதிவி (மண்) தலமாகிய காஞ்சிபுரம், நீர்த் தலமாகிய திருவானைக்கா இவற்றைத் தொடர்ந்து, அக்னித் தலமாகிய திருவண்ணாமலையை இனித் தரிசிப்போம்.

சித்ரா மூர்த்தி

Related Stories: