இவ்வுலகில் நன்மை பெறுவதற்கும் உயரிய வாழ்க்கை வாழ்வதற்கும் தேவையென்ன என இன்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் பணத்தைதான் குறிப்பிடுவார்கள். உண்மை அதுவல்ல. எந்தப் பொருளையும் நாம் இப்பிறவி முடிந்தபின் எடுத்துச் செல்லப் போவதில்லை. ஒவ்வொரு மனிதனின் தொடர்ச்சியும் அவன் பாவ – புண்ணியங்கள் (நன்ைம – தீமைகள்) அடிப்படையிலேயே தொடர்கின்றன. பணம் இல்லாவிடிலும் எந்த விஷயமும் இல்லாவிடிலும் ஒருவன் செய்த புண்ணியம் அவனை ஏதோ ஒரு ரூபத்தில் காக்கும் என்பதை ஜோதிடம் வலியுறுத்திக் கொண்டே உள்ளது. ஆனால், நமக்கான தேவைகள் நம்மை துரத்திக் கொண்டே இருப்பதாலும் அச்சத்தாலும் இதை உணராமல் வாழ்கிறோம் என்பதே வாழ்வின் நிதர்சனம். எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவன் பிறந்திருந்தாலும் அவன் பிராப்த பாக்கிய யோகம் மற்றும் பாக்கியம் பெற்றிருந்தால் கண்டிப்பாக உயர்வான நிலையை நோக்கி ஒருநாள் முன்னேறுவான் என்பது நிச்சயம்.
பிராப்தம் என்றால் சிலருக்கு என்னவென்று புரியாத ஒரு விஷயமாக இருக்கலாம். ஒருவன் எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்ளாத பொழுது அவனுக்கு இப்பிறவியில் பாடுவதோ, ஆடுவதோ, நன்றாக சமைப்பதோ நிகழ்வது எப்படி? முற்பிறப்பின் தொடர்ச்சியால்தான் இது தொடர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே, நாம் இப்பிறப்பில் சேமிக்கின்ற புண்ணியங்களே நம்மை காப்பாற்றும் என்பதை மறக்க வேண்டாம். எத்தனை ஆயிரம் கோடி பொருள் இருந்தாலும் அடுத்த பிறவிக்கு வருவதில்லை. உங்களுடன் வருவது நீங்கள் செய்த நன்மை தீமைகளே…
பிராப்த பாக்கிய யோகம் என்றால் என்ன?
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் (5ம்) அதிபதியும், ஒன்பதாம் (9ம்) அதிபதியும், ராசிக்கு ஐந்தாம் (5ம்) அதிபதியும், ஒன்பதாம் (9ம்) அதிபதியும், கேந்திரம் என்று சொல்லக்கூடிய 1,4,7,10ல் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் பிராப்த பாக்கிய யோகம் ஆகும். அதுமட்டுமின்றி இந்த ஐந்தாம் (5ம்), ஒன்பதாம் அதிபதியும் (9ம்) இணைந்து கிரக யுத்தமின்றி அசுப கிரகங்கள் பார்வையின்றி நல்ல நிலையில் இருந்தால் கண்டிப்பாக அது பெரிய வெற்றியைத் தேடித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிராப்த பாக்கிய யோகத்தின் சூட்சுமங்கள் என்ன?
நீங்கள் வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறும் வழிகள் உருவாகும். யாரென்றே தெரியாத நபர்கள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள். உங்களின் உழைப்பானது ஒரு பங்கு எனில் வெற்றி கண்டிப்பாக பல மடங்காக உயரும் அமைப்பை பெற்றிருப்பீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்புகள் நிகழும். உங்களுக்கென்று தனிப்பாதையை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குள் எதிர்காலத்தில் இது நடக்கலாம் என்ற சிந்தனை உருவாவதற்கான எண்ணங்கள் உருவாகும். அதுவே நடக்கும் பொழுது உங்களுக்கே ஆச்சர்யங்கள் உண்டாகும். இந்த பிராப்த பாக்கியம் கிரகங்களைப் பொறுத்தே மாற்றங்களும் மாறுபாடுகளும் உண்டு. சிலருக்கு சேவை செய்கின்ற எண்ணமும் மற்றவர்களின் அன்பும் வழிந்தோங்கும்.
லக்னத்தின் அடிப்படையில் பிராப்த பாக்கிய யோகம்…
*மேஷ லக்னத்திற்கு சூரியனும் வியாழனும் இணைந்து பிராப்த பாக்கிய யோகம். ஞாயிற்றுக்கிழமையும் வியாழக்கிழமையும் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுதல்
சிறப்பைத் தரும்.
*ரிஷப லக்னத்திற்கு புதனும் சனியும் இணைந்து பிராப்த பாக்கிய யோகம். இவர்கள் திருநங்கைளுக்கு உதவி செய்தால், அவர்களின் ஆசியை பெற்றால் பல நன்மைகள் உண்டாகும்.
*மிதுன லக்னத்திற்கும் கன்னி லக்னத்திற்கும் சுக்ரனும் சனியும் இணைந்து பிராப்த பாக்கிய யோகம். இவர்கள் ஒவ்வொரு வெள்ளி, சனிக்கிழமை தோறும் காமாட்சி அம்மனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகும்.
*கடக லக்னத்திற்கும் சிம்ம லக்னத்திற்கும் செவ்வாயும் வியாழனும் இணைந்து பிராப்த பாக்கிய யோகம். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் செந்தில் ஆண்டவரை வழிபட்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தால் சில தோஷங்கள் நீங்கி நன்மை உருவாக வழியுண்டாகும்.
*விருச்சிகம் லக்னத்திற்கு வியாழனும் சந்திரனும் இணைந்து பிராப்த பாக்கிய யோகம். இவர்கள் வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை கொண்டைக் கடலை கொடுத்து வழிபாடு செய்து வர பிரச்னைகள் சீராவதற்கான வழிகள் கிடைக்கப் பெறுவார்கள்.
*தனுசு லக்னத்திற்கு செவ்வாயும் சூரியனும் இணைந்து பிராப்த பாக்கிய யோகம். இவர்கள் ஒவ்வொரு மாதத்தில் ஒரு செவ்வாய்க் கிழமையும் அண்ணாமலையாரை தரிசனம் செய்வது சிறப்பான நற்பலன்களைத் தரும்.
*மகர லக்னத்திற்கு சுக்ரனும் – புதனும் இணைந்து பிராப்த பாக்கிய யோகம். இவர்கள் லெட்சுமி நாராயணரை தொடர்ந்து வழிபடுதல் நற்பலன்களையும் நல்ல வழிகளையும் வெற்றியையும் உருவாக்குவதற்கான வாய்ப்புகளை தரும்.
*கும்ப லக்னத்திற்கு புதனும் – செவ்வாயும் இணைந்து பிராப்த பாக்கிய யோகம். இவர்கள் திருவாதிரை நட்சத்திர நாளில் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தால் வெற்றிகள் உருவாகும்.
*மீன லக்னத்திற்கு செவ்வாயும் சந்திரனும் இணைந்து பிராப்த பாக்கிய யோகம். இவர்கள் பால முருகனுக்கு திங்கள்கிழமை அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுதல் வெற்றிகளை உருவாக்கும் யுக்தியை தரும்.
