பெட்ரோல் உயர்வை கண்டித்து திமுக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பரமக்குடி, பிப்.23: பரமக்குடியில் பெட்ரோல், டீசல், மற்றும் காஸ் விலை ஏற்றத்தை கண்டித்து, ஒட்டப்பாலம் பகுதியிலிருந்து பரமக்குடி முழுவதும் திமுக.வினர் சைக்கிள் பேரணி நடத்தினர். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் காஸ் விலை அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலை ஏற்றத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இதன் தொடர்ச்சியாக பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.டி அருளானந்து, மாவட்ட கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடந்தது.

பெட்ரோல்,டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி மற்றும் விழிப்புணர்வு நடனம் நடைபெற்றது. ஒட்டப்பாலம் பகுதியில் தொடங்கிய சைக்கிள் பேரணி ஐந்துமுனை சாலை, பேருந்து நிலையம், கிருஷ்ணா தியேட்டர் வழியாக சர்வீஸ் சாலையில் சென்று தரைபாலம் வழியாக எமனேஸ்வரத்தில் நிறைவு செய்யப்பட்டது. இந்த பேரணியில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமரகுரு, பரமக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் சன் சம்பத்குமார், மகளிர் அணி செல்வி சக்திவேல், வடக்கு நகர் பொறுப்புக் குழு உறுப்பினர் பைசல் மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், அனைத்து வார்டு செயலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: