அதிகாரிகளின் அலட்சிய போக்கால் வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு சரிந்து வரும் நீர்மட்டம்

பரமக்குடி, பிப்.23: பரமக்குடி வைகை ஆற்றின் கரையோரத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால், மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி வைகை ஆறு செல்லும் பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 7 இடங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்படுத்தப்பட்டு மணல் விற்பனை செய்து வந்தனர். அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டு, மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டது அதுவும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆற்றில் மணல் இல்லாமல் கட்டாந்தரையாக கருவேல மரங்கள்,நாணல்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனால் குடிநீர் மற்றும் ஊற்று நீருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகர் பகுதியில் 200 அடியில் நீரூற்று இருந்த நிலையில் தற்போது 500 அடிவரை ஆழ்குழாய் அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆற்றிலிருந்து, நகராட்சி குடிநீர் கிணறுகளை தொடங்கி வீடுகளில் இருந்த கிணறுகள் வரை தூர்ந்து போய் காணப்படுகின்றன. இந்நிலையில், வருவாய் மற்றும் காவல் துறையினரின் ஆசியுடன் அவ்வப்போது மணல் திருட்டு தொடர் கதையாக நடந்து வருகிறது. காட்டுப் பரமக்குடி,பெருமாள் கோவில்,மணிநகர், எமனேஸ்வரம் பள்ளிவாசல் எதிரில், காக்கா தோப்பு என வைகை கரையோரங்களில் மணல் திருடர்கள் தண்ணீர் குடம், சைக்கிள்,டூவீலர்களில் கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. ஆற்றின் பகுதிக்கு சென்று மணல் அள்ளினால் அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்வோம்.

என கருதி, மணல் கொள்ளையர்கள் கரையோரங்களில் உள்ள கருவேல மரங்களுக்கு இடையே பள்ளங்களை உருவாக்கி மணலை எடுத்து வருகின்றனர்.இதனால், ஆற்றின் இரு கரைகளில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோடு கான்கிரீட் கட்டிடங்கள் பலம் இழந்து அபாய நிலையில் உள்ளது. போலீசார், தாலுகா கனிமவளத் துறை அதிகாரிகள் மணல் கடத்தல்கார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவதால் மணல் கொள்ளை தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கரையோரங்களில் தலை சுமையாகவும் மணல் கொள்ளையடிப்பவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: