அமெரிக்கா – ஈரான் இடையே 2ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை எப்போது?

 

வாஷிங்டன்: ஈரான் உடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். கடந்த பிப். 28ம் தேதியன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானின் கடற்படை மற்றும் அணுசக்தி தளங்கள் உள்ளிட்ட ராணுவ கட்டமைப்பு 100 சதவீதம் அழிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது ஈரான் வசமுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்த நாடு மூடியுள்ளதால் உலக அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனால், ஈரானின் அணுசக்தி திட்டங்களை கைவிடுவது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘அடுத்த இரண்டு நாட்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார். பாகிஸ்தான் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், 14 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் தற்போது அமலில் உள்ளது. இதற்கிடையே, நேற்று முதல் ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் அமெரிக்க ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், ‘எங்களது முற்றுகையை மீறி ஈரான் கப்பல்கள் அருகே வந்தால், அவை உடனடியாக அழிக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார். இதற்கு பதிலடியாக, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது 15 அம்ச அமைதி திட்டத்தை முன்வைத்து ஈரானை பணிய வைக்க அமெரிக்கா தீவிரமான நீண்டகால திட்டம் ஒன்றை வகுத்து செயல்பட்டு வருகிறது.

Related Stories: