ஈரானிய சரக்குக் கப்பலை இடைமறித்து கைப்பற்றிய அமரிக்கா.!! கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்

ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் அந்நாட்டின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா சிறைபிடித்து உள்ளது. அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்து உள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை முற்றுகையானது தொடர்ந்து முழு வீச்சில் நடைமுறையில் இருக்கும் என்று இரு நாட்களுக்கு முன்னர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்த கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணை அருகே வளைகுடாப் பகுதியில் ஈரானியக் கொடியுடன் சென்ற ஒரு சரக்கு கப்பலை அமெரிக்கா இடைமறித்து நிறுத்தியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கப்பலை உடனடியாக நிறுத்துமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு உரிய முறையில் பதிலளிக்கத் தவறியதால் டூஸ்கா (Touska) என்ற அந்தக் கப்பல் அமெரிக்கக் கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ளார். இது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல் என்றும், அமெரிக்காவின் இந்த ஆயுதமேந்திய கடற்கொள்ளைக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றொரு தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்ற தகவலை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய சிலமணி நேரங்களில் இந்த கப்பல் சிறைப்பிபிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனால் ஈரான் இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க போவதில்லை என்ற முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்கா கடல் முற்றுகை அமலில் இருக்கும் வரை அமைதி பேச்சுவார்த்தை எதிலும் ஈரான் அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட ஈரான் சரக்கு கப்பல் முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் கப்பலில் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று அமெரிக்கா கூறி இருக்கிறது. தொடர்ச்சியான எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் என்ற நீர்மூழ்கிக் கப்பல், ஈரான் சரக்கு கப்பலின் இயந்திர அறையை நோக்கி பலமுறை சுட்டதாகவும், பின்னர் அதில் ஏறி, அதனை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே ஓமான் வளைகுடாவில் இருந்த அமெரிக்கக் கடற்படையின் ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல் ஒன்று, குறிப்பிட்ட ஈரான் சரக்கு கப்பலை நிறுத்துமாறு எச்சரித்ததாகவும், ஆனால் அந்த கப்பல் தங்களின் உத்தரவிற்கு கீழ்ப்படியவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி இருக்கிறார்.

Related Stories: