×

ஓட்டு போட்டேன், அல்வா எங்கே? புகார் கொடுத்த கல்லூரி மாணவனுக்கு அல்வா அனுப்பிய தேர்தல் ஆணையம்

திருவனந்தபுரம்: முதன்முதலாக வாக்களித்த தனக்கு அல்வா கிடைக்கவில்லை என்று கூறி புகார் செய்த கல்லூரி மாணவனுக்கு தேர்தல் ஆணையம் அல்வாவை ஸ்வீட் போஸ்டில் அனுப்பி வைத்தது. கேரளத்தில் முதன் முதலாக வாக்களிக்கும் 18-19 வயதுடைய இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அல்வா வழங்க மாநில தேர்தல் ஆணையம் தீர்மானித்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பூத்துகளில் மட்டும்தான் அல்வா வழங்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆனால் அல்வா கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் சென்ற பல இளம் வாக்காளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்ந்தெடுக்கப்பட்ட பூத்துகளில் மட்டுமே வழங்கியதால் பெரும்பாலான இளம் வாக்காளர்களுக்கு அல்வா கிடைக்கவில்லை. அதுவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அல்வா அனுப்பி வைக்கப்பட்டிருந்ததால் பலரும் அதிருப்தியடைந்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் பல இளம் வாக்காளர்கள் புகார் அனுப்பினர்.

ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பூத்துகளில் மட்டுமே அல்வா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்ததால் அனைவருக்கும் அல்வா கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. இந்நிலையில் தனக்கு அல்வா கிடைக்கவில்லை என்று புகார் செய்த பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஆரோன் பிலிப் ஜேக்கப் (19) என்ற கல்லூரி மாணவனுக்கு தேர்தல் ஆணையம் ஸ்பீட் போஸ்டில் அல்வா அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது. திருவல்லா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 178ம் எண் பூத்தில் இவர் ஓட்டு போட்டார்.

தனக்கும் அல்வா கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் ஜேக்கப் அன்று வாக்களிக்க சென்றார். ஓட்டு போட்டு முடித்தவுடன் தனக்கு அல்வா வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரியிடம் ஜேக்கப் கேட்டார். ஆனால் அந்த பூத்திற்கு அல்வா வரவில்லை என்று அவர் கூறினார். இதனால் ஏமாற்றமடைந்த ஜேக்கப் உடனடியாக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், மாவட்ட கலெக்டருக்கும் இமெயில் மூலம் தனக்கு அல்வா கிடைக்கவில்லை என்று புகார் அனுப்பினார். ஜேக்கப்பின் புகாரை உடனடியாக பரிசீலித்த தேர்தல் ஆணையம் அவருக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் அல்வாவை அனுப்பி வைத்தது.

Tags : halwa ,Election Commission ,Thiruvananthapuram ,Kerala ,
× RELATED நிதிஷ்குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து...