- ஐ-பேக்
- ED
- புது தில்லி
- அமலாக்க இயக்குநரகம்
- விக்னேஷ் சந்தல்
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- மேற்கு வங்க அரசு
புதுடெல்லி: பணமோசடி வழக்கில் ஐ பேக் இயக்குனர் விக்னேஷ் சந்தலை 10 நாள் அமலாக்கத்துறை காவலில் வைப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மேற்கு வங்க அரசுக்கும் அரசியல் ஆலோசனைகளை ஐபேக் நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்நிலையில் நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில் ஐபேக் நிறுவனத்தின் இயக்குனர் விக்னேஷ் சந்தலுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி டெல்லியில் உள்ள விக்னேஷ் வீடு, பெங்களூரில் உள்ள ஐபேக் இணை இயக்குனர் ரிஷிராஜ் சிங் வீடு மற்றும் மும்பைியல் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் என்பவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஐ பேக் இயக்குனர் விக்னேஷ் சந்தல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின், நள்ளிரவில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் அவரை 10 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது.
* ஐ பேக் இயக்குனர், மனைவிக்கு சம்மன்
ஐ பேக் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதீக் ஜெயினின் மனைவி மற்றும் சகோதரரை ஹவாலா பரிவர்த்தனை தொடர்பான பணமோசடி வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பார்பி ஜெயின் மற்றும் புல்கித் ஜெயின் ஆகிய இருவரும் டெல்லிஅமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
