பாகிஸ்தானில் அடுத்த 2 நாட்களில் அமெரிக்கா-ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை: அதிபர் டிரம்ப் பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தானில் அடுத்த 2 நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே 2 வார கால போர் நிறுத்தம் கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுவுடன் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தியது.

இருதரப்புக்கும் இடையே 47 ஆண்டுகளில் நடந்த முதல் நேரடிப் பேச்சுவார்த்தை இது. ஆனால், 21 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு ஒப்பந்ததமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. ஈரான் அணுசக்தி திட்டத்தை கைவிட தயங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. தங்களின் நம்பிக்கையை பெற அமெரிக்கா தவறி விட்டதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், வரும் 21ம் தேதியுடன் 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வர உள்ள நிலையில், அதற்குள் அமெரிக்கா-ஈரான் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

பாகிஸ்தானின் ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியில், 2ம் கட்ட பேச்சுவார்த்தைகளை உறுதி செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துணை பிரதமர் இஷாக் டார் மற்றும் ராணுத தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டிருப்பதாக சில உயர்மட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மீண்டும் இஸ்லாமாபாத்தில் நடத்தப்படலாம் என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகைக்கு வெளியே பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘‘எதிர்தரப்பில் (ஈரான்) இருந்து எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது என்பதை என்னால் கூற முடியும். அவர்கள் எப்படியாவது ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்’’ என்றார். ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருக்கிறது. ஆனால் அது சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் மட்டுமே இருக்க வேண்டும்’’ என்றார்.

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியில் அளித்த பேட்டியில், ‘‘ஈரான்-அமெரிக்கா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் விடுத்த அறிக்கையில், ‘‘ஒரே இரவில் எந்த ஒப்பந்தமும் ஏற்பட முடியாது. பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும். இதற்கு அமெரிக்காவும், ஈரானும் முன்வர வேண்டும்’’ என அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே, நேற்றிரவு நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு அதிபர் டிரம்ப் அளித்த தொலைபேசி பேட்டியில், ‘‘ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த 2 நாட்களில் பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கக் கூடும். இன்னும் 2 நாளில் ஏதேனும் முக்கிய நிகழ்வு நடைபெறக் கூடும்.

நாங்கள் அங்கு செல்வதற்கு அதிக ஆர்வம் கொண்டுள்ளோம். பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் சிறப்பாக பணியை மேற்கொண்டு வருகிறார். எனவே பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வேறு இடத்தை தேட வேண்டிய அவசியமில்லை’’ என்றார். இதன் மூலம் அமெரிக்கா-ஈரான் இடையே 2ம் கட்ட பேச்சு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

* பிரான்ஸ், இங்கி. தலைமையில் நாளை மறுதினம் ஆலோசனை
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை மீட்பது குறித்து பிரான்ஸ், இங்கிலாந்து தலைமையில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 2வது முறையாக நாளை மறுதினம் வீடியோ கான்ஸ்பரன்ஸ் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக பிரான்ஸ் அதிபர் அலுவலகம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

* ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்ற 3 கப்பல்கள்
ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி உட்பட அனைத்து துறைமுகங்களிலும் கப்பல்கள் உள்நுழைதல் மற்றும் வெளியேறுவது தடுக்கப்பட்டு முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டினார். அவர் விதித்த கெடுபிடி, நேற்று இரவு அமெரிக்க கடற்படையின் முற்றுகை அமலுக்கு வந்தது. ஆனாலும், நேற்று 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றதாக ஈரான் தெரிவித்துள்ளது. பனாமா கொடி ஏற்நதி பீஸ் கல்ப் என்ற கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தை நோக்கி சென்றதாக கூறப்பட்டுள்ளது. எனவே, டிரம்ப் மிரட்டியது போல ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் ஈரானின் எந்த கப்பலும் அமெரிக்க கடற்படையால் தாக்கப்படவில்லை.

* ரூ.25 லட்சம் கோடி ஈரானில் சேதம்
போரால் ஏற்பட்ட சேதத்திற்கு அமெரிக்கா இழப்பீடு தர வேண்டுமென்பது ஈரானின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், ஈரானில் இதுவரை ரூ.25 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதுவே இறுதியான சேத மதிப்பீடு இல்லை என்றும் அரசு செய்தி தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

* பந்து ஈரான் கையில் உள்ளது
எதிர்கால பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சிடம் கேட்டதற்கு, ‘‘பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்ற கேள்வியை ஈரானியர்களிடம் கேட்பதே சிறந்தது. ஏனெனில் பந்து உண்மையில் அவர்கள் கையில்தான் உள்ளது. அணு ஆயுதத்தை உருவாக்க மாட்டோம் என்ற அவர்களின் உறுதியான வாக்குறுதியை நாம் பெற வேண்டும். ஈரானியர்கள் அந்த விஷயத்திற்கு தயாராக இருந்தால், இரு நாடுகளுக்கும் இடையே மிகமிக சிறந்த ஒப்பந்தம் ஏற்படும் என நம்புகிறேன்’’ என்றார்.

* பிரதமர் மோடி-டிரம்ப் 40 நிமிடம் பேச்சு
ஈரான் போர் நிறுத்தத்திற்கு பிறகு பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சுமார் 40 நிமிடம் நேற்று தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தினார்கள். ஈரானில் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னையால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 114 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் எரிபொருள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியுடன் 40 நிமிட தொலைபேசி உரையாடலை நடத்தி உள்ளார். அப்போது அடுத்து நடைபெற உள்ள அமெரிக்க-இந்திய சந்திப்புகள் குறித்து விரிவாக விவாதித்தார். ஈரானுக்கு சீனா ராணுவ ஆதரவு அளிப்பதாகக் கூறப்படும் நிலையில் சீனா மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. மேலும் ஈரானுடன் பாகிஸ்தானில் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய சூழலில் பிரதமர் மோடி, டிரம்ப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு டிரம்ப், மோடி இடையே நடைபெறும் முதல் தொலைபேசி உரையாடல் இதுவாகும். இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,’ என் நண்பர் அதிபர் டிரம்ப்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு ஒத்துழைப்பில் எட்டப்பட்ட கணிசமான முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம்.

அனைத்துத் துறைகளிலும் நமது விரிவான உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும், மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் நாங்கள் விவாதித்தோம், அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்..

Related Stories: