மேற்கு ஆசியா போர் இந்தியாவில் 25 லட்சம் பேரை வறுமையில் தள்ளும் அபாயம்: ஐநா கணிப்பு

ஐக்கிய நாடுகள்: ‘மத்திய கிழக்கில் ராணுவ பதற்றம் அதிகரிப்பால் ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் ஏற்படும் மனித மேம்பாட்டு தாக்கங்கள்’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு ஆசியா போர் மற்றும் ராணுவ பதற்றத்தால் அதிகரித்த எரிபொருள், சரக்கு மற்றும் உள்ளீட்டு செலவுகள் குடும்பங்களின் வாங்கும் சக்தியை குறைக்கிறது. உணவு பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது. பட்ஜெட்களில் சுமையை ஏற்படுத்துகிறது. இது வாழ்வாதாரங்களைப் பலவீனப்படுத்துகிறது.

மேற்கு ஆசியா போரால் ஆசியா-பசிபிக் பகுதிக்கு 299 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30 லட்சம் கோடி) வரை இழப்பு ஏற்படக்கூடும். இந்தியாவில் சுமார் 4 லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளது. இதுவே உலகளவில் வறுமையில் தள்ளப்படும் மக்களின் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 88 லட்சமாக அதிகரித்துள்ளது. ராணுவ மோதல் தீவிரமடைவதால், இந்தியாவில் வறுமை விகிதம் 23.9 சதவீதத்தில் இருந்து 24.2 சதவீதமாக உயரும். போருக்கு முன்னர் 35,15,69,000 ஆக இருந்த வறுமையின் எண்ணிக்கை, போருக்கு பின்னர் 35,40,33,698 ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பணவரவில் சுமார் 38-40 சதவீதத்தை வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 1 கோடி இந்தியர்கள் பங்களிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக மருத்துவ சாதனங்களுக்கான மூலப்பொருட்களின் விலை சுமார் 50 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருந்துகளின் மொத்த விலைகள் ஏற்கனவே 10-15 சதவீதம் உயர்ந்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

* உணவு பாதுகாப்பில் பாதிப்பு
இந்தியாவின் 45 சதவீதத்திற்கும் அதிகமான உர இறக்குமதிகளை மேற்கு ஆசிய நாடுகளே வழங்குகின்றன. உள்நாட்டு யூரியா உற்பத்தியில் 85 சதவீதம், இறக்குமதி செய்யப்படும் எல்என்ஜி வாயுவை சார்ந்துள்ளது. எனவே எந்தவொரு நீடித்த இடையூறும், ஜூன் மாதம் தொடங்கும் காரிப் (பருவமழை கால பயிர் சாகுபடி) பருவத்திற்கான விவசாயத்தை பாதிக்கக் கூடும்.

யூரியா கையிருப்பு 61.14 லட்சம் டன்களாக உள்ளது. இது குறுகிய காலத்திற்கு தற்காலிக பாதுகாப்பை வழங்கினாலும், நடவுப் பருவம் வரை இடையூறுகள் தொடர்ந்தால், முழுமையான பாதுகாப்பை வழங்காது. இதனால் உணவு பாதுகாப்பில் மேலும் அழுத்தங்கள் அதிகமாகும்.

Related Stories: