பெங்களூரு அணி வெற்றி

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 20வது போட்டி, மும்பையில் நேற்று நடந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்து வீசியது. அதையடுத்து, பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர்.

இந்த இணையின் அதிரடியால், 52 பந்துகளில் பெங்களூரு 100 ரன்களை எட்டியது. ஷர்துல் தாக்குர் வீசிய 11வது ஓவரில், பில் சால்ட் (36 பந்து, 6 சிக்சர், 6 பவுண்டரி, 78 ரன்) ஆட்டமிழந்தார். அதையடுத்து வந்த ரஜத் படிதார், அமர்க்களமாக ஆடி ரன்களை குவித்தார். 15வது ஓவரில், விராட் கோஹ்லி 37 பந்துகளில் அரை சதம் எட்டினார். அடுத்த 2வது பந்தில் கோஹ்லி (38 பந்து, 1 சிக்சர், 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

அதன் பின், டிம் டேவிட் களமிறங்கினார். 16வது ஓவரின் கடைசி பந்தில் படிதார் (20 பந்து, 5 சிக்சர், 4 பவுண்டரி, 53 ரன்) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு, 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன் குவித்தது. இதையடுத்து, களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

Related Stories: