கொரோனா கட்டுப்பாடுகளால் பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா களை இழந்தது

கூடலூர்,பிப்.21: நீலகிரி மாவட்டம் மசினகுடியை அடுத்துள்ள சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் 5 நாள் நடைபெறும் திருவிழாவில் நீலகிரி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமிகும்பிடுவது வழக்கம். மேலும் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கரகம் எடுத்து வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

திருவிழா நாட்களில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த வருடம் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் துவங்கிய திருவிழா செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது. ஆனால் சிறப்பு பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் கடைகள் அமைக்கவும், பூஜை பொருட்கள் விற்பனை செய்யவும், பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கவும், தேங்காய் உடைத்து பூஜை செய்யவும், வழக்கமாக அம்மனுக்கு நடைபெறும் தேர் ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களில் வந்து  அம்மனை தரிசித்து உடனடியாக அங்கிருந்து கூட்டம் கூடாமல் கலைந்து செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து கோயில் வளாகம் வெறிச்சோடியது. மாவட்ட நிர்வாகத்துடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே கோயில் வளாகத்தில் விரதம் இருந்து கரகம் எடுத்து வரும் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட கடுமையான நடவடிக்கைகளால் பக்தர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்: நூற்றாண்டு கால பாரம்பரிய முறைப்படி நடக்கும் திருவிழாவை முறைப்படி நடத்தாமல் கட்டுப்பாடுகள் விதித்து திருவிழாவின் மகத்துவத்தை மாவட்ட நிர்வாகம் குலைத்து விட்டது.

சமவெளிப் பகுதிகளில் உள்ள கோயில் திருவிழாக்கள் வழக்கம் போல் நடைபெறும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கடுமையான நடவடிக்கைகள் ஏன் என்பது புரியவில்லை. அரசியல் கட்சியினர் நிகழ்ச்சிகளில் கூட்டம் கூட்டுவதற்கு தடை விதிக்காத மாவட்ட நிர்வாகம் கோயில் திருவிழாவில் விதித்து இருப்பது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.திருவிழாக்காலங்களில் சிறு வியாபாரிகள் பலர் பயனடைந்து வந்தனர். மாவட்ட நிர்வாகம் கட்டுபாடு காரணமாக ரூ.50 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளால் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

Related Stories: