வடலூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்தேதி நடக்கிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் வாக்கு சேகரித்து வருகிறார். அவரது பிரசார திட்டத்தின்படி நாளை (11ம்தேதி) கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதியை தேர்தல் துறை ரத்து செய்துள்ளது. இதனால் நாளை வடலூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தவெக தலைவர் விஜய் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 9ம்தேதி பிரசாரம் மேற்கொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடலூர் தவெக வேட்பாளர் ராஜ்குமாரின் உறவினர் கடை மற்றும் வீட்டில் வருமான வரித்துறை கடந்த 2 தினங்களாக சோதனை நடத்திய நிலையில், கடைசி நேரத்தில் புதுச்சேரி வாக்குப்பதிவை காரணம் காட்டி, விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் 11ம்தேதி (நாளை) கடலூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரத்தில் ஈடுபட தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்டனர். இதையடுத்து விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, திமுக தரப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வடலூரில் பிரசாரம் மேற்கொள்ள விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி முதலில் விண்ணப்பித்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் விஜய் பிரசாரத்துக்கு நாளை அனுமதி தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
