விஜய்யை விட்டுவிட்டு அஜித்தை கையில் எடுக்கிறதா அதிமுக?: தல ரசிகர்களை வளைக்கத் தீவிர வியூகம்

சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திரையுலக நட்சத்திரங்களின் ரசிகர்களைத் தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனித்துப் போட்டியிடும் சூழலில், அதிமுக நடிகர் அஜித்தின் ரசிகர்களைக் குறிவைத்துத் தனது காய்களை நகர்த்தி வருகிறது. ஆரம்பத்தில் நடிகர் விஜய்யின் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டது. சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் குரல் கொடுத்ததும், எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும் இக்கருத்தை வலுப்படுத்தின. ஆனால், விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதைத் தொடர்ந்து, அதிமுக – தவெக கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்தது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதால் ஏற்பட்ட தாக்கத்தைச் சமாளிக்க, அதிமுக தற்போது நடிகர் அஜித்தின் ரசிகர்களை நோக்கித் திரும்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சமீபத்தில் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தின் முன்னே அஜித் ரசிகர்கள் அவரது புகைப்படத்தைக் காட்டி உற்சாகப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அஜித் ரசிகர்கள் எப்போதும் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களாகவே இருந்து வருகின்றனர். அஜித்தை நான் நேரில் சந்தித்தபோது, அவர் ‘தல’ என்றும் ரஜினி ‘மலை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். 90 சதவீத அஜித் ரசிகர்கள் அதிமுகவில்தான் உள்ளனர். ஏன், விஜய் ரசிகர்கள்கூட எங்களுக்காக 2011ல் உழைத்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இந்த வியூகத்தைக் கிண்டல் செய்துள்ள தவெக நிர்வாகி நிர்மல் குமார், “அதிமுக தலைவர்கள் தற்போது கடும் குழப்பத்தில் உள்ளனர். ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் வழியை விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காகச் செயல்படுகிறார். இந்தத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற பெயரே இருக்காது” எனச் சாடியுள்ளார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் எனக் கருதப்படும் நிலையில், அஜித் ரசிகர்கள் மூலம் அதனை ஈடுகட்ட அதிமுக எடுக்கும் இந்த முயற்சி எந்த அளவிற்குப் பலன் தரும் என்பதைத் தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.

Related Stories: