திண்டிவனம்: பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக அக்கட்சி 2 அணிகளாக பொதுத்தேர்தலை சந்திக்கிறது. இதில் அன்புமணிக்கு சாதகமாக அக்கட்சியின் சின்னம், கொடி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கிய நிலையில், அதை தடுக்கும் வகையில் நீதிமன்ற படிக்கட்டுக்களை தொடர்ந்து ஏறிய ராமதாசுக்கு அடுத்தடுத்து பின்னடைவே ஏற்பட்டது. பாமகவின் முழு அதிகாரமும் அன்புமணிவசம் சென்றடைய தேர்தல் களத்தில் ெஜாலிக்க முடியாத நிலை ஏற்பட அவரிடமிருந்த ஆதரவாளர்கள் ஒருவர்பின் ஒருவராக அன்புமணி பக்கம் தாவத் தொடங்கினர்.
ஏற்கனவே புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி, விக்கரவாண்டி வேட்பாளர் புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் நீக்கப்பட்ட நிலையில் தற்போது கடலூர் மாவட்ட செயலாளர் ஜெகன், வன்னியர் சங்க மாநில செயலாளர்களான முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், அய்யாசாமி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அன்புமணியிடம் தஞ்சமடைந்த நிலையில் இந்நடவடிக்கையை ராமதாஸ் எடுத்துள்ளார். சசிகலாவின் அஇபுமமுகவுடன் கைகோர்த்த ராமதாஸ், கூட்டணி அறிவிப்போடு சரி. அதன்பிறகு சசிகலாவுடன் எந்தவித நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் உள்ளார்.
அவருடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்த பிறகே நிர்வாகிகளின் விலகல் தொடர்கதையாகி வருவதால் ராமதாஸ் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளார். அவரது அணி சார்பில் செயல் தலைவரான ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவரான ஜிகே மணி களமிறங்குவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த கூட்டணி அமையாததால் இருவரும் பின்வாங்கி விட்டனர். அவர்களே தங்களது பலத்தை உணர்ந்துவிட்ட நிலையில் இனியும் ராமதாசை நம்பியிருந்தால் பலனில்லை என்ற முடிவெடுத்தே படிப்படியாக அன்புமணி பக்கம் தைலாபுரம் ஆதரவு வட்டாரங்கள் சாய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதுவும் ராமதாஸ் அணி சறுக்கலுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதனிடையே இதுவரை மாம்பழத்துக்கு வாக்குகேட்டு வந்த ராமதாஸ், இத்தேர்தலில் தனது ஆதரவு பெற்ற 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனது மகனிடம் உள்ள மாம்பழ சின்னத்தை எப்படியாவது இத்தேர்தலில் முடக்க, அவரையும் பொது சின்னத்தில் நிற்க வைத்துவிட வேண்டுமென்ற ராமதாஸின் தொடர் முயற்சி கானல்நீராகும் நிலையே ஏற்பட்டுள்ளது. மாம்பழத்துக்கு பதிலாக அன்புமணிக்கு பொதுசின்னம் வழங்க வேண்டுமென்ற தனது தரப்பு கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்ட நிலையில், ராமதாசின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தைலாபுரம் வட்டாரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
