முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த எடப்பாடி பழனிசாமியின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொரோனா பெருந்தொற்றானது திமுக ஆட்சிக்காலத்தில் வந்திருந்தால் ஸ்டாலின் அதில் போயிருப்பார் என்று எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கீழ்த்தரமாக பேசி இருந்தார்.
அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் அவர், முதல்வர் ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமி கூறிய மோசமான கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. அன்பு தளபதி ஸ்டாலின் அவர்கள் கொரோனா தொற்றின் போது நோயாளிகளை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார், இப்படி செய்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கொரோனா காலத்தில் நோயாளிகளைச் சந்திக்கும் அளவிற்கு துணிச்சல் இல்லாமல் இருந்தார்.
ஸ்டாலின் போல் துணிச்சல் இல்லாத எடப்பாடி பழனிசாமி தான் ஏதோ கொரோனா காலத்தில் திறமையாகச் செயல்பட்டது போல் பிதற்றி கொண்டிருக்கிறார்.கொஞ்சம் கூட அரசியல் நாகரிகமின்றி வாழும் மனிதர் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். அவரிடம் நாம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதற்காக இப்படி பேசுவது ஏற்கத்தக்கது அல்ல, முற்றிலும் அநாகரீகமானது அவர் பேச்சு. இது போன்ற அநாகரீகங்களை மட்டுமே வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் எப்போதும் உச்சத்தைத் தொட முடியாது, இதனை மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். ஏற்கனவே 10 தோல்வி பழனிசாமியாக இருக்கும் அவர் விரைவில் 11 தோல்வி பழனிசாமியாக மாற போகிறார், எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல் நாகரிகமற்ற நபர்களை மக்கள் புறம் தள்ளுவது உறுதி என்றார்.
