நல்லாட்சி தொடர வேண்டும் செல்வபெருந்தகை பிரசாரம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிள்ளியூர் ராஜேஷ்குமார், விளவங்கோடு பிரவீன், குளச்சல் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: சமூக நலனும் பொருளாதார வளர்ச்சியும் 2 கண்கள் என்று சொல்லுவார்கள். அந்த அடிப்படையிலே கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார்.

1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தார். விடியல் பயணம், நகரப் பேருந்துகளிலே தாய்மார்கள் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்ளலாம் என்று சொன்னார்கள். புதுமைப் பெண் திட்டம், நம்முடைய பிள்ளைகள் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் 36 மாதங்கள் படிக்கும் வரை நம்முடைய பெண் பிள்ளைகளைப் புதுமைப் பெண்ணாக உருவாக்கினார்கள். ஆண் பிள்ளைகளுக்குத் தவப்புதல்வன் என்ற திட்டத்தைத் துவக்கினார். அவர்களுக்கும் 1000 ரூபாய் எந்தவித வேறுபாடும் இல்லை என்று 36 மாதங்களுக்குப் பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆயிரம் ஆயிரம் கொடுத்தார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 1000 ரூபாய் உரிமைத் தொகை 2000 ரூபாயாக கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். வீடுகள்தோறும் இல்லத்தரசிகள் பொருள் வாங்குவதற்கு 8000 ரூபாய் கூப்பன் தருவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். காலை உணவுத் திட்டம் 5ம் வகுப்பு வரை இருக்கிறது, அதை 8ம் வகுப்பு வரை நீட்டிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக் காலத்தில் 8000 கொடுத்து வந்ததை இப்போது 12,000-ஆக உயர்த்தி வழங்கப் போகிறோம் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆகவே ஒரு நல்லாட்சி தொடர வேண்டும். மக்களுக்காக உழைக்கின்ற, மக்களுக்காகப் போராடுகின்ற நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேஷ்குமார் அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தேர்தலிலே தாமரைக்கு பதிலடி கொடுத்து டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: