புதுடெல்லி: பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக இன்று மாலை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. அப்போது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு அளிப்பதா? திருத்தங்களை வலியுறுத்துவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கடந்த 8ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ எனப்படும் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, நாடாளுமன்ற மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதைய 543 என்ற எண்ணிக்கையிலிருந்து 816 ஆக அதாவது 50 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு 273 இடங்கள் அதாவது சுமார் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்காமல், 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலேயே இதனை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா பவன் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.
மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். அவசர கதியில் தொகுதி மறுவரையறை செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்தானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். இதுதவிர, மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில், ஒன்றிய அரசு கொண்டு வரும் இந்த சட்டத்திருத்தத்தை இந்தியா கூட்டணி ஆதரிப்பதா அல்லது திருத்தங்களை வலியுறுத்துவதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
