வேப்பந்தட்டை உள்ளிட்ட வாக்கு பதிவு மையங்களில் பெரம்பலூர் எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர், ஏப். 10: வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி வாக்கு பதிவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகன சோதனைகளை தீவிரப்படுத்த, சந்தேகத்திற்கு இடமான நபர்கள், பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி கி.பிரபாகர் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேர்தல் பணிக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் மற்றும் பூலாம்பாடி ஆகிய வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்களுக்கான வசதிகள், காவல்துறையினரின் பணிப்பகிர்வு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்தார்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லைகளில் ஒன்றான உடும்பியம் சோதனை சாவடியில் பணிபுரியும் காவல் துறையினரின் செயல் பாடுகளை மதிப்பீடு செய்தார். மேலும், தேர்தல் நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் வாகன சோதனைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும் காவலர்களுக்கு அறிவுறுத்தி வாகன சோதனைகளை செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பணியில் ஒழுங்கு, மரியாதை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பொது மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட மதுவிலக்கு அமலாக் கப்பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ் பெக்டர்கள் உடன் இருந்தனர்.

 

Related Stories: