வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் முப்பெரும் விழா

பெரம்பலூர், ஏப். 10: வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த முப்பெரும்விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் வேலு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று (9ஆம் தேதி) வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் இளைஞர் எழுச்சி விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் (பொ) ராமராஜ் தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சிராப் பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் வேலு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை கூறினார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் துறைத் தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னதாக கணிதத்துறை தலைவர் சக்திவேல் வரவேற்றார். முடிவில் இயற்பியல் துறைத் தலைவரும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனருமான (பொறுப்பு) பாஸ்கரன் நன்றி கூறினார்.

 

Related Stories: